
posted 27th September 2021
மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் அரச சார்புள்ள பிரிவுகள் என்ன செய்கின்றது?
இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (பத்ம நாபா மன்றம் - ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்த விவகாரம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் நுகர்வோர் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் பொருட்களின் விலை அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சகலமக்களும் இந்த விலை அதிகரிப்பின் காரணமாக பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலை தொடர்வதை நுகர்வோர் விலைகட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏன் பாராமுகமாக உள்ளனர்? நாளாந்த தேவைக்குரிய மீன், அரிசி, பால்மா, பருப்புவகை, சீனி, சீமேந்து, உரம், கோதுமைமா,மீன்டின்,அனுமதியற்ற மதுபானங்கள், ஏன் மரக்கறி வகைகளும் கூட அதிகவிலையில் விற்பனை செய்யப்படுவதும், கொரோனா-19 தொற்றும், ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் வேளையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருப்பதும் ஆரோக்கியமானதல்ல.
எனவே மக்களது நிலை உணர்ந்து அரச நிருவாகத்திற்கு கட்டுப்பட்ட அமைச்சுக்களும், திணைக்களங்களும் குறிப்பாக, விலை உயர்வை கட்டுப்படுத்தும் அரசபிரிவு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாராமுகமாக இருந்தால் சம்பந்தப்பட்டோரும் இதற்கு உடந்தையா என மக்கள் மத்தியில் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது" எனத்தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்