
posted 8th September 2021
குடும்பநல உத்தியோகத்தர்களின் உழைப்புக் கேற்ற ஊதியம் இலங்கையின் ஏனைய மாகாணங்களில் வழங்குகின்றபோது ஏன் வடக்கு மாகாணம் ஒரு மாற்றாந் தாயாக விளங்குகின்றது என்பதே இன்று குடும்பநல உத்தியோகத்தர்கள் தொடுக்கும் ஒரு கேள்வியாக அமைகின்றது.
கொவிட் 19 தொற்று நோயானது உலகத்தில் பல நாடுகளை அச்சத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இவ்வேளையில் இது இலங்கை நாட்டையும் இது பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவது யாவரும் அறிந்த ஒரு விடயமாக இருக்கின்றது.
இதன் தொற்று ஒருபுறமிருக்க மரணங்களும் நாளொரு வண்ணம் பொழுதொரு மேணியாக இடம்பெற்று வருவதும் நாளாந்த செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலையில் வைத்தியர்கள் உட்பட சுகாதார சேவையாளர்கள் பல தரப்பினரும் இத் தொற்று நோயை எமது நாட்டில் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அத்துடன் இவர்களும் இத் தொற்று நோய்க்கு உள்ளாகி பாதிப்படைந்து வருவதுடன் மரணத்தையும் தழுவிக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்த வகையில் வடக்கு மாகாணத்திலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சகல தரப்பினரும் இத் தொற்று நோய் ஏனைய மாவட்டங்களைப் போன்று மன்னாரில் பரவாதிருக்க மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் தலைமையில் விழிப்புடன் இருந்து செயல்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதில் வெளிக்களப் பணியில் கடமையாற்றிவரும் குடும்பநல உத்தியோகத்தர்களையும் இந்நேரத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது கட்டாயமே.
செவ்வாய் கிழமை (07.09.2021) மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 90 குடும்பநல உத்தியோகத்தர்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணியக பணிமனையின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களின் இந்த போராட்டத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது ஒன்று என்னவென்றால் தங்கள் பணியில் உழைப்புக்கேற்ற ஊதியம் இலங்கையின் ஏனைய மாகாணங்களில் வழங்குகின்ற போது ஏன் வடக்கு மாகாணம் ஒரு மாற்றாந் தாயாக விளங்குகின்றது என்பதே இவர்கள் தொடுக்கும் ஒரு கேள்வியாக அமைகின்றது.
இவர்கள் வடக்கு மாகாண ஆளுநர். வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சு செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு முன்னிலையில் வைக்கும் கருத்துக்களாவது;
வெளிக்களப் பணியில் கடமையாற்றிவரும் குடும்பநல உத்தியோகத்தர்களாகிய நாங்கள் தாய் சேய் நல சேவைகள் தவிர்ந்த தற்போதைய கொவிட் 19 பரவல் காரணமாக எமது பணிகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எமது கடமைநேரம் தவிர்ந்த நேரங்களிலும் விடுமுறை தினங்களிலும் கடமையாற்றவேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளோம். எனினும் நாம் மேலதிகமாகக் கடமையாற்றிய காலப்பகுதிக்கு இதுவரையில் எவ்விதமான மேலதிக நேரக்கொடுப்பனவும் எமக்கு வழங்கப்படவில்லை.
தற்போதைய கொவிட் 19 பரவினை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தடுப்பூசி நடவடிக்கைகளையும் வாரத்தில் எல்லா நாட்களிலும் எமது பிராந்தியத்தின் திட்டமிடலுக்கு அமைவாக எமது பூரண ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றோம்.
எமது குழந்தைகள் பெற்றோர்களைக் கவனிக்கும் நேரத்தைக் குறைத்து கூடிய நேரத்தினை எமது பணியிலேயே செலவிட்டு வருகின்றோம்.
மேலும் பொது சுகாதார பரிசோதர்களுடன் இணைந்து பி.சீ.ஆர். பரிசோதனைகளும் அன்ரிஜன் பரிசோதனைகள் செய்தல், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளினை தரிசித்தல், தடுப்பூசி ஏற்றுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு எமது பணியினை முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றோம்.
எனவே எமது இந்நிலையைக் கருத்திற்கொண்டு ஏனைய மாகாணங்களில் களப்பணியில் ஈடுபடும் குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு மாகாண பிரதம செயலாளரினால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அதிகாரக் கையளிப்பு வழங்கப்பட்டு மேலதிக நேரக் கொடுப்பனவு மாதாந்தம் வழங்கப்படுவது போன்று வடக்கு மாகாணத்திலும் களப்பணியில் ஈடுபடும் குடும்பநல உத்தியோகத்தர்களும் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி மேலதிக நேரக் கொடுப்பனவினை உரிய காலத்தில் பெற்றுக் கொள்வதற்கு ஆவண செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என வேண்டிக்கொள்ளுகிள்றனர்.
இதேவேளையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்திருப்பது மன்னாரைப் பொருத்தமட்டில் இந்த குடும்பல உத்தியோகத்தர்கள் இப் பிராந்தியத்தில் கொவிட் தொற்று நோய் தடுப்பின் செயல்பாட்டில் இவர்கள் தங்கள் கடமைகளுக்கு மேலாக நாளாந்தம் ஐந்து தொடக்கம் ஆறு மணித்திலங்கள் மேலதிக கடமைகளை புரிந்து வருகின்றனர். இது தொடர்பாக இவர்கள் தற்பொழுது கேட்கும் மேலதிக சேவை கொடுப்பனவு சம்பந்தமாக தான் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால் இதுவரைக்கும் தனக்கு சாதகமான பதிலும் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, குடும்பநல உத்தியோகத்தர்கள் சுட்டிக் காட்டுவது, இலங்கையின் ஏனைய மாகாணங்களில் கொடுக்கப்படும் மாதாந்த மேலதிக நேரக் கொடுப்பனவு ஏன் வடக்கு மாகாணத்திற்குச் கொடுக்கப்படுவதில்லை? எனவே, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எங்கள் இந்த நியாயமான கோரிக்கையைக் கவனத்தில் கொள்வாரா? என்பதுதான்.

வாஸ் கூஞ்ஞ