வங்காலைப்பாட்டு மீனவர்கள் இன்று (25.09.2021) நள்ளிரவு கடற்படையினால் தாக்கப்பட்டனர்.  கிராம அலுவலரும் படுகாயம்
வங்காலைப்பாட்டு மீனவர்கள் இன்று (25.09.2021) நள்ளிரவு கடற்படையினால் தாக்கப்பட்டனர்.  கிராம அலுவலரும் படுகாயம்

மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட மீனவ கிராமமாகிய வங்காலை பாட்டில் (பேசாலை) நள்ளிரவு வேளையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு கிராம அலுவலகர் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இத் தாக்குதலின்போது ஒரு சில மீனவர்கள் காயங்களுக்கு உள்ளாகி இருப்பதுடன் பெண்கள் கடற்படையினரால் நையப்புடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் இன்று 25.09.2021 வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் வங்காலை பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது;

வெள்ளிக்கிழமை (25) நள்ளிரவு வேளையில் ஒரு படகில் சென்ற இரு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபின் கரை திரும்பியுள்ளனர்.

அந்நேரம் படகு கரையை அடைந்ததும் கரையில் சிவிலுடன் நின்ற இருவர் படகுக்குள் ஏறி மீனவரை தாக்கியதாகவும் அச்சமயம் மீன் பிடிக்குச் சென்ற தனது தகப்பனுக்கு உதவி செய்ய சென்ற கிராம அலுவலர் யூட் பிறிசன் லெம்பேட் (வயது 32) சம்பவ இடத்திற்குச் சென்றவேளையில் நான் ஒரு கிராம அலுவலகர் என்றும் இம் மீனவரை தாக்கும் நோக்கம் என்ன என்று கேட்டதும் சிவிலில் நின்று மீனவரை தாக்கிய இருவரும் அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டனர்.

பின் ஒரு சில நேரத்துக்குள் இவ்விருவரும் மேலும் பத்து பதினைந்து கடற்படையினருடன் சம்பவ இடத்துக்கு வந்து பொல்லு தடிகளால் கிராம அலுவலகரை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான கிராம அலுவலகரின் கூக்குரல் கேட்டு அவ்விடத்துக்கு விரைந்து வந்த மீனவ குடும்பங்களைச் சார்ந்த ஆண்கள் பெண்கள் அவர்களின் தாக்குதலுக்கும், நையப்புடைப்புக்கும் உள்ளாகியதாக முறையீடு செய்யப்பட்டுள்ளது .

படு காயங்களுக்கு உள்ளான கிராம அலுவலர் நள்ளிரவே பேசாலை பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோது அவர் மயக்க நிலைக்கு அடைந்ததால், அவரின் உறவினர்கள் உடனடியாக அவரைக் கொண்டு சென்று பேசாலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப் பகுதி தற்பொழுது பெரும் பதற்ற நிலைக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இச் சம்பவம் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அதிகாலை சம்பவ இடத்திற்கு வருகைதந்து மீனவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் இச் சம்பவத்தை கடற்படை, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்து இவ் மீனவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும், நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக அரச அதிபர் தலைமையில் கடற்படை, பொலிஸ் மற்றும் இப்பகுதி மீனவ சமூக பிரதிநிகளுடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்று கோரி அதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவ இடத்துக்கு சென்ற மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சியும் பாதிப்பு அடைந்த மீனவர்களையும் மற்றும் மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து விபரங்களை கேட்டறிந்ததும் குறிப்பிடத்தக்கது.

வங்காலைப்பாட்டு மீனவர்கள் இன்று (25.09.2021) நள்ளிரவு கடற்படையினால் தாக்கப்பட்டனர்.  கிராம அலுவலரும் படுகாயம்

வாஸ் கூஞ்ஞ