
posted 14th September 2021
யாழ்ப்பாணத்தில் குழந்தையுடன் யாசகம் பெற்று வந்த பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் சொந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
யாழ். நகரின் மத்திய பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பெண்ணொருவர் குழந்தையுடன் யாசகம் பெற்று வந்துள்ளார். சில வேளைகளில் அவருடன் ஒரு ஆணும் இணைந்து மூவருமாக வீதியில் செல்வோரிடம் பண உதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.
குறித்த ஆணும்,பெண்ணும் தம்மை தம்பதியினராக காட்டிக்கொண்டு குழந்தையுடன் நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நின்று வீதியில் சொல்வோரை வழிமறித்து தாம் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் , இங்கே உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த வேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை என்றும் வீடு செல்ல பண உதவி தருமாறும் கோரி பண உதவிகளை பெற்று வந்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ். பிரதேச செயலரின் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றதை அடுத்து அவர் அது தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவித்தார்.
அதன் பிரகாரம் நேற்று அந்தப் பெண், தட்டாதெரு சந்தியை அண்மித்த பகுதியில் குழந்தையுடன் நின்றிருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், அவர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர்கள் அங்கிருந்து குடும்பமாக வந்து மணியந்தோட்டம் பகுதியில் தங்கியுள்ளனர் என்றும்
தினமும் மணியந்தோட்டம் பகுதியில் இருந்து ஓட்டோவில் யாழ்.நகர் மற்றும் நகரை அண்டிய பகுதியில் குழந்தையுடன் வந்திறங்கி , வீதியில் செல்வோரிடம் பண உதவிகளை பெற்று வந்துள்ளனர் என்றும் பொலிஸார் அறிந்து கொண்டனர்.
அவர்களை எச்சரித்த பொலிஸார் சொந்த இடத்துக்கு செல்லுமாறு பணித்தனர். அத்துடன் குழந்தையுடன் யாசகம் பெற்று மீண்டும் கைது செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

எஸ் தில்லைநாதன்