
posted 18th September 2021

“மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த காலத்தில் பட்ட துன்ப துயரங்கள், சிந்திய கண்ணீரும், செந்நீரும் தான் இன்று கட்சியிலுள்ள பலர் கோடீஸ்வரர்களாக மாறவும், மற்றும் சிலர் குபேரர்களாகத் தம்மை நினைக்கும் வகையில் திகழவும் உரமாக மாறியது”
இவ்வாறு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், கட்சியின் பீரங்கிப் பேச்சாளராகத் திகழ்ந்தவருமான “முழக்கம்” ஏ.எல்.அப்துல் மஜீத் காட்டமாகக் கூறினார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரபின் 21 ஆவது நினைவு தினத்தையொட்டி, அவர் ஆற்றிய நினைவேந்தல் உரையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
தலைவர் அஷ்ரபின் நினைவேந்தலை யொட்டி தமது முகநூல் வாயிலாக அவர் நினைவேந்தல் உரையாற்றினார்.
தவிசாளர் அப்துல் மஜீத் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் பின்வருமாறு கூறினார்.
“அன்று தலைவர் அஷ்ரப் பெரும் துன்ப துயரங்களுக்கு மத்தியில், தியாகத்தின் மூலம் வளர்த்தெடுத்த, உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரியைக் கொடுத்து தலை நிமிர்ந்து வாழ வைத்தது.
ஆனால் அவரது மறைவுக்குப்பின், முதுகெலும்புள்ள அவரது தலைமைத்துவ செயற்பாடுகள், உறுதியான தீர்மானங்களை முன்னெடுக்கும் திறன்களை இழந்து அது முஸ்லிம் சமூகத்தை நலிவடையும் நிலைக்குத்தள்ளியுள்ளது.
கட்சிக்காக அயராது உழைத்த, கண்ணீர் சிந்திக்கஷ்டப்பட்ட, குடும்பங்களை இழந்த பலர் இன்று கட்சியை விட்டும் ஒதுங்கியுள்ளனர்.
எந்த நோக்கித்திற்காக, சமூகத்தின் விடிவுக்காக, உரிமைக்காக தலைவர் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்தாரோ, அப்பாதையை விட்டும் கட்சி தடம் மாறி பலர் கோடிஸ்வரர்களாக மாறவும், இன்னும் சிலர் குபேரர்களென நினைக்கவும், மாறவும் வழிவகுத்துள்ளது.
குறுநிலமன்னர்களையும், கோடீஸ்வரர்களை உருவாக்கவும் தான் கட்சி இன்று செயற்படும் நிலையுள்ளது.
அன்று தலைவர் அஷ்ரப் கட்சியின் கட்டமைப்பை, குறிப்பாக உச்சபீடத்தை மிகப் பலமிக்கதாக மிளிரச் செய்தார். ஆனால் இன்று கட்சியின் உச்ச பீடம் மலினப்படுத்தப்பட்டுள்ளது.
தலைவர் அஷ்ரப் காலத்தில் 23 உறுப்பினர்களுடன் இறுக்கமாக இருந்து வந்த உச்ச பீடம் இவ்வாறு மலினப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமன்றி அங்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என்ற நிலையும் இன்றுள்ளது.
இந்நிலையில், தலைவர் அஷ்ரப் முன்வைத்த இலக்குகளை, அவரது கொள்கை கோட்பாடுகளை, சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா? எனக்கேட்க விரும்புகின்றேன்.
தமிழர்கள் அழிந்து விட்டார்கள், ஒழிந்துவிட்டார்களென அரசு நினைத்தது, ஆனால் தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து நிற்கிறார்கள். அவர்களின் தலைமைகள் முதுகெலும்புள்ளவர்களாகத் திகழ்கின்றனர்.
இதனால் தான் தம் சமூகத்திற்காக, உரிமைக்காக மனோகணேசன், சாணக்கியன், போன்ற பல தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் உரத்துக்குரல் கொடுத்து வருகின்றனர்.
இத்தகைய தலைமைகளே சிறுபான்மை சமூகங்களுக்குத் தேவையாகும். ஆனால் முதுகெலும்பில்லாத முஸ்லிம் பிரதி நிதிகளால் முஸ்லிம்களது வாக்குகளின் பெறுமானம் பலகீனப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்றப் பிரதி நிதிகள், நம்மவர்கள் இன்று இருட்டுக் குகைக்குள் அடைபட்டுக் கொண்டுள்ளனர்.
மொத்தமாக முஸ்லிம்களின் அரசியல் தோல்வி அடைந்து விட்டது. முதுகெலும்பற்றவர்களால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
இன்று மன்னிக்காதவர்களை, மன்னிக்கப்படக் கூடாதவர்களை மன்னித்து விட்டோம் என்கின்றனர்.
18வது, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நமது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கையுயர்த்தி ஆதரவளித்தது மட்டுமன்றி
20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஓரங்க நாடகமே நடத்தினார்கள்.
இதற்காக அவர்கள் பேசிய, பெற்றுக்கொண்ட முன்வைத்த முஸ்லிம்களின் அரசியல் உரிமைதான் என்ன?
கிழக்கில் அரசு பறித்த காணிகளை மீட்டார்களா, ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து குருநாகல் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், அழிக்கப்பட்ட உடமைகள் தொடர்பில் காப்பீடுகளைப் பெற்றுக்கொடுத்தார்களா, இப்படி கை உயர்த்தி ஆதரவளித்தவர்களைக் கேட்க வேண்டியுள்ளது.
கோட்டா அரசுக்கு எம்மவர்கள் மனச்சாட்சிப்படி ஆதரவு வாக்களித்ததாகக் கூறினார்கள். அப்போது எதிர்த்து வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மனச்சாட்சி எங்கு அடகு வைக்கப்பட்டதோ தெரியவில்லை.
நல்லாட்சி அரசில் கரையோர மாவட்டக் கோரிக்கையைத் தூக்கிப்பிடித்த நம்மவர்கள் இன்று அது விடயத்தில் மௌன விரதம் காப்பதன் தார்ப்பரியமும் புரியவில்லை.
தலைமைத்துவங்களை நம்பி சமூகம் உள்ளது. ஆனால் பாராளுமன்ற பிரதி நிதிகள் சாமரம் வீசும் தலைமையே எமக்குள்ளது வேதனைக்குரியது.
வருடா வருடம் தலைவர் அஷ்ரபை நினைவு கூர்ந்து விட்டு, உடனே மறப்பது நம்மவர் வாழக்கமாகியுள்ளது.
இதை விட்டும் நாம் அன்னாருக்கு செய்யும் மரியாதையாக அவரது இலக்குகள் நோக்கிய செயற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும்.
தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட நம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தீயோர் அழித்துவிட இடமளிக்க முடியாது. தலைவர் அஷ்ரப் எதற்காக கட்சியை ஸ்தாபித்தாரோ அதை வென்றெடுக்கவும், கட்சியைப் பாதுகாக்கவும் கட்சிப் போராளிகள் முன் வரவேண்டும்.
இதற்காக அவசரமும், அவசியமுமான முடிவுகளை, நாம் எடுக்க வேண்டும். அவை உறுதியானவையாகவும் அமைய வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
“பெருந்தலைவரின் நினைவுந்தலும் முஸ்லிம் காங்கிரஸின் சமகால அரசியல் நிலையும்” எனும் தலைப்பில் மேற்படி உரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்