முதல் வீடு 'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' என்ற திட்டத்தின் கீழ் கையளிப்பு
முதல் வீடு 'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' என்ற திட்டத்தின் கீழ் கையளிப்பு

அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய 'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' என்ற திட்டத்தின் கீழ் கிராமத்திலுள்ள ஒரு ஏழை குடும்பத்துக்கு அமைக்கப்பட்ட வீட்டை கையளித்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஓலைத்தொடுவாய் என்னும் கிராமத்தில் செவ்வாய் கிழமை (14.09.2021) நடைபெற்ற இவ் நிகழ்வானது,
மன்னார் வீடமைப்பு அதிகார சபை முகமையாளர் நோயல் ஜெயசந்திரன் தலைமையில் இவ் வீடு கையளிக்கும் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் ஆகியோர் இதில் கலந்து கொண்டு இவ் வீட்டை பயனாளிக் குடும்பத்துக்கு திறந்து கையளித்தனர்.

அரசாங்கத்தின் ஆறு லட்சம் ரூபா மானிய அடிப்படையில் இவ் வீட்டுக்கு இவ் வருடம் ஜனவரி 22 ந் திகதி அரசாங்க அதிபரால் அடிக்கல் நாட்டப்பட்டு இவ் வீட்டு பயனாளியின் பங்களிப்புடன் சுமார் 12 லட்சம் ரூபா பெறுமதியான வீடாக இது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது மன்னார் மாவட்டத்தில் 153 கிராம அலுவலகப் பிரிவிகளில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த வருடம் 67 குடும்பங்களுக்கு இத் திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் நிதி பற்றாக்குறை காரணமாக இத் திட்டத்தின் கீழ் 51 வீடுகள் அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் வீடமைப்பு அதிகார சபை முகமையாளர் நோயல் ஜெயசந்திரன் தெரிவித்தார்.

கொரோனாவின் பாதிப்பும் மற்றும் நிதி பற்றாக்குறை காரணத்தினாலும் ஏனைய வீட்டுத் திட்டம் நிறைவு பெறாத நிலை இருந்தபோதும் இந்த வருடத்தில் இதுவே முதல் வீடு திறந்து கையளிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் வீடு 'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' என்ற திட்டத்தின் கீழ் கையளிப்பு

வாஸ் கூஞ்ஞ