
posted 13th September 2021
யாழ்., வடமராட்சி, கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தில் நேற்றுக் காலை ஒலி பெருக்கி சாதனங்கள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் முன் வாசல் பூட்டு உடைக்கப்பட்டு, கண்காணிப்புக் கமராக்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கமராக்களும் உடைக்கப்பட்டு திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலய பிரதான மண்டபத்தின் அருகில், ஆலயப் பொருட்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த ஒலி பெருக்கி மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் திருடப்பட்டுள்ளன.
அத்துடன், ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட பொருட்களின் விபரம் முழுமையாகத் தெரியவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்