
posted 14th September 2021

தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர்
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் போது குற்றங்களைப் புரிந்துள்ளார் என்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருப்பதாகத் தெரிவித்து தவிசாளர் மற்றும் சபை அங்கத்துவர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது கடந்த 09.03.2018 அன்று இடம்பெற்றது. இத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது இப் பிரதேச சபைக்கான ஆட்சியை தன்வசம் கைப்பற்றியிருந்தது.
இதற்கமைய இப் பிரதேச சபைக்கான தவிசாளராக இக் கட்சியைச் சார்ந்த சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் புதுக்குடியிருப்பு வட்டாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவர் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மன்னார் பிரதேச சபையின் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கமைய எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரனை செய்து அறிக்கை சமர்ப்பிப்தற்காக 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 185 (2) ஆம் உப பிரிவுகளுக்கமைய நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதி அலுவலர் கந்தையா அரியநாயகம் அவர்களின் கீழ் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரனை குழுவினால் விசாரனை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்திற் கொண்டதன் பின்பே இவர் அவரது மன்னார் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13 ந் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் 2021 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து இவர் அவரது இப் பதவிகளிலிருந்து நீக்கபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ