
posted 7th September 2021
மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளில் ஞாயிற்றுக் கிழமை (05.09.2021) 05 நபர்களுக்கு கொரோனா தொற்று என உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தனது நாளாந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1773 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில், மன்னார் பொது வைத்தியசாலையில் 03 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த ஒருவருக்கும், மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் ஒருவருக்கும் மொத்தமாக 05 பேர்களும் அடங்குவதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் மன்னார் மாவட்டத்தில், செப்டம்பர் மாதத்தில் 5ந் திகதி வரை 89ம், இவ் வருடம் மட்டும் 1756 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ் வருடம் (2021) மன்னார் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 1321 நபர்களும், மன்னார் பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 435 பேருமே இந் நோய் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில், இந்த மாதம் (செப்டம்பர்) இதுவரை 254 பி.சீ.ஆர். பரிசோதனைகளும் இதுவரைக்கும் மொத்தமாக 28,014 பி.சீ.ஆர். பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரைக்கும் கொரோனா காரணமாக 20 நோயாளர்களே மரணத்தை தழுவிக் கொண்டதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன் இதுவரைக்கும் கொரோனா முதலாவது தடுப்பூசிகள் 62,543 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசிகள் 55,384 நபர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ