
posted 7th September 2021
நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இயங்கிவரும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
“மத்தியஸ்த சபைச் செயற்பாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தல்” எனும் தலைப்பில் நீதி அமைச்சினால், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மேற்படி கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையின்படி, மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு அமர்வுக்கான கொடுப்பனவான 500 ரூபா 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதுடன், மாதத்திலுள்ள ஆறு நாட்களுக்கான அதிகபட்ச கொடுப்பனவாக 6000 ரூபா வழங்குதல் வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விசேட (நிதி) பிணக்குகளான வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களால் மத்தியஸ்த சபைகளுக்கு முன்வைக்கப்படும் பிணக்குகளுக்கு 1000 ரூபாவினை கட்டணமாக அறவிடல் வேண்டுமெனவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சின் சார்பில், அமைச்சின் செயாலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னேவினால் இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் மத்தியஸ்த சபைகள் (ஆநனயைவழைn டீழயசன) ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவருகின்றன.
இதன்படி மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் முன்னூறுக்கு மேற்பட்ட மத்தியஸ்த சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு அளப்பரிய சேவையாற்றி வருவதுடன், இதில் சுமார் 700 இற்கும் அதிகமான மத்தியஸ்தர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
நீதி மன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளில் சிறிய பிரச்சினைகளைச் செலவு குறைவாகவும், நேரதாமதமின்றியும் இரு சாராருக்கும் வெற்றி எனும் வகையில் தீர்த்து வைப்பதிலும் மத்தியஸ்த சபைகள் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றன.

ஏ.எல்.எம்.சலீம்