
posted 18th September 2021

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் சேவகனாய் பணியாற்றி கொடிய கோவிட் தாக்கத்தின் காரணமாக மரணமடைந்த கிராம அலுவலர் பஞ்சாட்சரம் உமாபதியின் இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுடன், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கபடபட்டுள்ளது. அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் சேவகனாய் 33 வருடங்களாக வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராம அலுவலராக பணி புரிந்து, மக்களில் ஒருவனாய் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான பணிகளை பஞ்சாட்சரம் உமாபதி அவர்கள் முன்னெடுத்திருந்தார். தனது கடமைக்கு அப்பால் மக்களுக்கான சமூகத் தொண்டனாகவும், ஆலய தர்மகத்தவாகவும் மக்களுக்கான சேவைகளை பல்வேறு கட்டங்களிலும் இன்முகத்துடன் செய்து வந்தார்.
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், வீட்டுதிட்டம் என மக்களுக்கான உதவிக் கரமாக இருந்து கிராம அலுவலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அந்த பணிகளை சமூகத் தொண்டனாக தொடர்ந்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் சார்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்யிட்டு இருந்ததுடன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) சிந்தனையுடன் எமது கட்சியின் மாவட்ட மட்ட செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்தார். கொடிய கோவிட் தொற்று காரணமாக கிராம அலுவலர் ப.உமாபதி இறந்து விட்டார் என்ற செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், அவரது இறப்பை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளவதுடன், அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் இறைவனை வேண்டி நிற்கின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்