
posted 13th September 2021

அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் முடிவடைந்த சிறுபோக அறுவடைநெல்லை சேமித்து வைக்காது விற்பனை செய்வதில் விவசாயிகள் தற்சமயம் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
நெல்லை சந்தையில் கூடுதல் விலைக்கு எதிர்காலத்தில் விற்பனை செய்யலாமென எதிர்பார்த்து சேமித்த விவசாயிகள் தற்பொழுது நாட்டில் பரவலாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் நடத்தப்படும் நெல் பதுக்கல் முற்றுகை காரணமாக அச்சம் கொண்டே விவசாயிகள் இவ்வாறு கிடைத்த விலைக்கு நெல்லை விற்றுப் பணமாக்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கடந்த காலங்களில் 66 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லை 4000 முதல் 5000 ரூபா வரை விற்பனை செய்து இலாப மீட்டிய சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்சமயம் 66 கிலோ கொண்ட ஒரு மூடை நெல்லை வெளி வியாபாரிகளும் அரிசி ஆலை உரிமையாளர்களும் 3500 ரூபா முதல் 3700 ரூபாவுக்குள்ளேயே கொள்வனவு செய்வதாகவும் தெரிய வருகின்றது.
இந்த நிலமையால் பெரும் பணச் செலவுடன் (கிருமிநாசினிகள், இரசாயனப் பசளைகள், அறுவடை இயந்திரக் கூலி) நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் எதிர்பார்த்த இலாபத்தை ஈட்ட முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொலனறுவைப் பகுதியில் பாரிய அளவில் நடத்தப்படும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் வசம் காணப்பட்ட அரிசியை அரசுடமையாக்கும் நடவடிக்கை கடந்த புதன் கிழமை இடம் பெற்றுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் செனரத் நிவுன் ஹெல்ல மற்றும் நுகர்வேர் அதிகார சபையின் தலைவர் ஆகியோரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்