நம்பிக்கை ஒளிக்கீற்று
நம்பிக்கை ஒளிக்கீற்று

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட் - 19 வைரஸ் தொற்று வீதமும், அதனாலான மரண வீதமும் குறைந்து வருவதாக நம்பிக்கைத்தகவல் மூலம் அறிய வருகின்றது.

தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நடைமுறையிலுள்ளது உட்பட பிராந்தியத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி ஏற்றலும் நம்பிக்கை ஒளிக்கீற்றாக இந்த நிலமைக்கு காரணமாகவுள்ளதென கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுவரை இப்பிராந்தியத்தில் 6800 இற்கும் அதிகமான கொவிட் - 19 தொற்றார்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், இதில் 157 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பணிப்பாளர் டாக்டர்.சுகுணன்
தற்சமயம் 500 தொற்றார்கள் கொவிட் - 19 சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 100 பேர் வைத்தியசாலைகளிலும், 100 பேர் இடைத்தங்கல் நிலையங்களிலும், மீதமான 300 பேரும் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை பொது முடக்க காலத்திலும் இப்பிராந்தியத்திலும் சில பொதுச்சந்தைகள், மீன் சந்தைகளில் தினமும் கூடுவோரில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்து ஒன்று கூடுவதால் பெரும் அச்ச நிலமையுமுள்ளதாகப் பணிப்பாளர் டாக்டர். சுகுணன் தெரிவித்தார்.

இந்த நிலமை கொவிட் பரம்பலின் வீதத்தை அதிகரிக்கும் அபாயமுள்ளதாகவும் அவர் மேலும் அச்சம் தெரிவித்தார்.

அத்தோடு பொது முடக்கமான தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் பொது மக்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையுமென்பதைப் பொறுத்தே கொவிட் பரவல் நிலமை எவ்வாறு எதிர்காலத்தில் அமையுமென்பதை வெளிப்படுத்தும் எனவும்,
பொது மக்கள் இது விடயத்தில் கண்டிப்பாக செயற்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

மேலும் நேற்று சனிக்கிழமை கல்முனைப் பிராந்தியத்தில் 34 கொவிட் வைரஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டதுடன், மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை ஒளிக்கீற்று

ஏ.எல்.எம்.சலீம்