
posted 11th September 2021
மன்னார் மாவட்டத்தில் சதொச மற்றும் பல நோக்கு கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ள இடங்களில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் நிலை காணப்படுகின்றபோதும் பின் தங்கியுள்ள கிராமபுர மக்கள் இதன் விடயத்தில் பலன் அடையாதவர்களாக காணப்படுவதாக இவ் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்களும் அற்ற இவ்வேளையில் அரசாங்கத்தால் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்கள் சதொச மற்றும் பல நோக்கு கூட்டுறவு சந்கங்களின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கூறிய இவ்விரு விற்பனை நிலையங்கள் இல்லாத கிராமபுர மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலையில் இருப்பதாக பல கிராமத்து மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கிராமங்களில் ஒன்றான மாதா கிராமம் பகுதியில் சுமார் இருநூறு குடும்பங்களுக்கு மேல் அங்கு வசிப்பதாகவும் அப்பகுதியில் ஓரிரு கடைகள் தவிர தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெறக்கூடிய சதொச அல்லது பலநோக்கு கூட்டுறவு விற்பனை நிலையங்களோ அற்ற நிலைமையே காணப்படுவதாகவும்
இவ் பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டுமானால் இருபது மைல் தூரத்திலுள்ள முருங்கன் பகுதிக்கே சென்று தங்களுக்க தேவையான பொருட்களை பெற வேண்டிய நிலை காணப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகவே இக்கட்டான காலத்திலாவது வாரம் ஒரு முறையாவது நடமாடும் சேவையின் மூலம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ