நகர சபை தவிசாளர்  பதவி சுயேட்சைக்குழு வசம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆட்சியில் இருந்த வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் பதவி சுயேட்சைக்குழு வசம் சென்றது.

வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் ச. செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் தவிசாளராக தொிவு செய்யப்பட்டார்.

நகரசபைத் தவிசாளராக பதவி வகித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கோ. கருணானந்தராசா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தவிசாளர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு நேற்று புதன்கிழமை (22) முற்பகல் நகரசபை பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில் நகர சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏழு உறுப்பினர்களில் ஆறு பேர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரு உறுப்பினர் ஆகியோர் வேட்பாளர் சதீஸிற்கு ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியின் இரு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றின் தலா ஒவ்வொரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு வேட்பாளர் செல்வேந்திராவிற்கு ஆதராவாக வாக்களித்தனர்.

கூட்டமைப்பின் உப தவிசாளரான ஆ.ஞானேந்திரன் சுயேட்சை குழுவிற்கு வாக்களிக்க வல்வெட்டித்துறை நகரசபையின் ஆட்சியை கூட்டமைப்பு இழந்தது.

இவ்வமர்வின் போது பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

நகரசபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு கடந்த இரண்டாம் திகதி இடம்பெற்ற போது கோரம் இன்மையால் கலவரையறை இன்றி ஒத்திவைத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நகர சபை தவிசாளர்  பதவி சுயேட்சைக்குழு வசம்
நகர சபை தவிசாளர்  பதவி சுயேட்சைக்குழு வசம்

எஸ் தில்லைநாதன்