
posted 2nd September 2021
மன்னாரில் மின் தகன நிலையம் ஒன்று அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து மன்னார் நகர சபையானது மின் தகன நிலையத்துக்கான இயந்திரம் கொள்முதல் செய்வதற்காக ஐம்பது இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதாக இதற்காக இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக இருந்து மரணிக்கின்றவர்களை தகனம் செய்வதற்கு வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கவனத்துக் எடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் செவ்வாய் கிழமை (31.08.2021) விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மன்னார் நகர சபைக்குட்பட்ட மன்னார் பொது மயானத்தில் உடனடியாக மின் தகன நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற அவசியம் உணர்த்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் இதற்கான நிதி உதவிகளை உள்ளுராட்சி சபைகள், பாராளுமன்னற உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரிடம் கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே புதன் கிழமை (01.09.2021) மன்னார் நகர சபை தலைவர் தலைமையில் இது தொடர்பான விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இவ் விஷேட கூட்டத்தில் 16 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் மேற்கூறிய விடயமாக ஆராயப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்படும் மின் தகன நிலையம் அமைக்கும் இத் திட்டத்துக்கு இந் நிலையத்துக்கான இயந்திரத்துக்காக மன்னார் நகர சபை 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் பொது அஞ்சலி மண்டபம் தகனம் எரியூட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் கிரியைகளை செய்வதற்கு தேவையான மண்டபமும் மற்றும் மலசலகூட வசதிகள் செய்வதற்கhன நடவடிக்கை மேற் கொள்ளப்பட இருப்பதாகவும் ஆலோசிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ