
posted 5th September 2021
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள தென்னந்தோட்டங்களில் அண்மைக் காலமாகத் தேங்காய் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சிறு தென்னந்தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் தேங்காய் விலை உயர்ந்து, ஒரு தேங்காய் 100 ரூபாவும், அதற்கு மேலும் விற்பனையாகும் நிலையில் தேங்காய் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
நிந்தவூர் அட்டப்பள்ளம், ஒலுவில் முதலான பிரதேசங்களிலுள்ள தென்னந் தோட்டங்களிலேயே தேங்காய் திருடர்கள் தொடர்ச்சியாகத் தமது கைவரிசைகளைக் காட்டி வருகின்றனர்.
இரவு வேளைகளில் கூடுதலாகத் தேங்காய்த் திருட்டு இடம்பெற்று வருகின்றபோதிலும், பட்டப்பகலிலும் இத்திருட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன.
மரங்களில் ஏறித்தேங்காய்களை இலாவகமாகப் பறித்து கீழிறக்கும் பலே பேர் வழிகளான இத்திருடர்கள் அங்கேயே வைத்து மட்டைகளை உரித்து தேங்காய்களை மட்டும் பைசிகல்களில் எடுத்துச் சென்று உள்ளுர் வியாபாரக்கடைகளுக்கு விற்று பணம் சம்பாதிப்பதாகத் தெரிய வருகின்றது.
அட்டப்பள்ளம் பிரதேசத்தில் போதை வஸ்த்துக்கு அடிமையான சில இளைஞர்களே இவ்வாறு தேங்காய் திருட்டில் வெகு சாதுர்யமாக ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தேங்காய் திருட்டு தொடர்பில், சிறு தென்னந்தோட்ட உரிமையாளர்கள் விழிப்படைந்து கண்காணிப்பை அதிகரித்துள்ளதால், மரத்தில் ஏறிகளவாடும் சமயமே சிலர் மாட்டிக்கொண்டு, “தக்க பரிசு” மழையில் நனையும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பிட்ட சில பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமிடத்து அதிகரித்து வரும் இந்த திருட்டு சம்பவங்களை ஒழிக்க முடியுமென பாதிக்கப்பட்ட தெங்குச் செய்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்