
posted 24th September 2021
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிவரை நடத்த ஏற்பாடாகியுள்ள 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரினால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபனை நினைவுகூரும் நிகழ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவல் காரணமாக நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது. எனவே திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கவேண்டும் என்று பொலிஸாரினால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியது. எனினும் தடைக் கட்டளையில் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை.

எஸ் தில்லைநாதன்