
posted 14th September 2021
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும்இ முன்னாள் அமைச்சருமான காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரஃபின் 21 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் 16 ஆம் திகதி வியாழக் கிழமை நாடெங்கும் இடம்பெறவுள்ளன.
நாட்டில் பரவியுள்ள தற்போதய கொவிட் 19 வைரஸ் பரவல் நிலைக்கு மத்தியில், நினைவேந்தல் தொடர்பான அரங்க நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாது, இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் விசேட துஆ பிராத்தனை, கத்தமுல் குர்ஆன் ஓதல் முதலான இஸ்லாமிய சன்மார்க்க கிரியைகள் மட்டுமே இதன் பேரில் இடம்பெறவுள்ளன.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்பீட ஏற்பாட்டில், வியாழன் இரவு 9.30 மணிக்கு zoom தொழில் நுட்பம் மூலம் பிரதான நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் “தலைவர் அஷ்ரஃப் நினைவேந்தல்” எனும் தலைப்பில் மேற்படி பிரதான நிகழ்வு zoom தொழிநுட்பம் மூலம் இடம்பெறவுள்ளது.
மேலும் இந்த பிரதான நினைவேந்தல் நிகழ்வில், தலைவர் ஹக்கீம் தலைமையில், சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காரதிர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சட்டத்தரணி பெரோஸா உசைன் (அஷ்ரபின் சகோதரி) மற்றும், கவிஞரும், திரைப்பட (சென்னை) நடிகருமான வ.ஜ.ச.ஜெயபாலன், இலக்கிய சமூக செயற்பாட்டாளர் (லண்டன்) எம்.பௌசர், கவிஞர் நபீல், வைத்திய கலாநிதி தாஸிம் அகமத் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
zoom தொழில்நுட்பத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தலைவர் அஷ்ஃரப் பற்றிய உரைகள், உரையாடல்கள், கவியரங்கு என்பன இடம்பெறவுள்ளன.
இதேவேளை நிகழ்வை முகநூல் (Facebook) யூரியூப் (YouTube) மூலம் பார்வையிடலாம்.
இங்கிலாந்தில் மாலை 5 மணிக்கும், பாரிஸ், பேர்லிங்கில் மாலை 6 மணிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இரவு 8 மணிக்கும் நிகழ்வைப் பார்வையிடலாம்.

ஏ.எல்.எம்.சலீம்