தற்கொலை முயற்சி தவறுதலென்றாகி தீக்காயத்தால் குடும்பஸ்த்தர் மரணம்

அல்லைப்பிட்டியில் மதுபோதையில் தற்கொலை செய்ய தனக்குத் தானே பெற்றோல் ஊற்றியபோது அடுப்பில் பெற்றோல் பாய்ந்து நெருப்பு எரிந்தமையால் கணவன் உயிரிழந்ததோடு மனைவி எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவத்தில் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 48 வயதுடைய சோ. ரவிச்சந்திரன் என்னும் குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

இவர் மதுபோதையில் உடன் பிறந்த அண்ணரைத் திட்டிப் பேசியுள்ளார். இதன்போது தமையனும் திரும்பித் திட்டிப் பேசியதால் தமையன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் தமையன் கையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அண்ணாவைத் தாக்கி விட்டேன் எனக் கூறியவாறு அதன் கவலையில் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றிய வேளை அருகில் மனைவி சமையலில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அடுப்பில் இருந்த தீ இருவர் மீதும் பற்றியது.

கணவர் தன் மீது பெற்றோலை ஊற்றியிருந்தமையால் அதிக நெருப்பு பற்றிக்கொண்டது.

உடனடியாக வீட்டார் இருவரையும் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தபோதும் ஒரு மணி நேரத்துக்குள் கணவர் உயிரிழந்தார். மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

தற்கொலை முயற்சி தவறுதலென்றாகி தீக்காயத்தால் குடும்பஸ்த்தர் மரணம்

எஸ் தில்லைநாதன்