
posted 15th September 2021
இல 2, செட்டித்தெரு ஒழுங்கை,
தொ.பேசி:- 0775122924, 0750720030
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சிலரை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோகான் ரத்வத்த துப்பாக்கிமுனையில் முழந்தாளிட வைத்து பயமுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் முறையீடு மிகவும் பாரதூரமானது.
இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர் அமைச்சர் என்ற பதவி நிலையில் உள்ளவர். அதுவும், சிறைச்சாலைகளுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் அமைச்சுப் பொறுப்பில் உள்ள ஒருவருக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டு முன் எப்பொழுதும் இந்த நாட்டில் எழுந்தது கிடையாது.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் நீதிமன்றக் கட்டளைகளின் பிரகாரமே அங்கு தடுத்து வைக்கப்படுகின்றார்கள். மனிதர்கள் என்ற முறையிலும், இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையிலும் அரசியல் சாசனத்தின் கீழ் அவர்களுக்கு பல்வேறு உரிமைகள் உண்டு.
அரசியல் அதிகாரத்தை எவரும் அவர்களுக்கு எதிராக பிரயோகித்து அடாவடித் தனமாக நடந்து கொள்வதற்கு சட்டத்தில் அறவே இடம் இல்லை. மேலும், அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பினை வகிக்கும் எவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டியவர்கள். அதற்கு மாறாக, சட்டத்தை மீறுபவர் அமைச்சராக இருந்தாலும் அவர் மீது சட்டம் பாய்ந்தே ஆக வேண்டும்.
மிகப் பாரதூரமான முறையீடு ஒன்று, குறித்த அமைச்சருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை ஜனாதிபதியும், பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.
மனித உரிமைகளில் நம்பிக்கை கொண்டுள்ள சகல அரசியற் கட்சிகளும், சமூக அமைப்புக்களும் இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தி குரல் கொடுக்க முன்வருவார்கள் என்றும் எதிர்பார்கின்றோம்.
ந.ஸ்ரீகாந்தா
சட்டத்தரணி - தலைவர், தமிழ்த் தேசியக் கட்சி

எஸ் தில்லைநாதன்