
posted 6th September 2021
“தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கியாள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள்” இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
“2243/1 அதிசிறப்பு அரசிதழ் மூலம் கோவிட் – 19ஐக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஜனாதிபதி அறிவித்துள்ளார். உண்மையில் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம் இடர் முகாமைத்துவச் சட்டம். அதன் கீழ் ஒரு செயலணியை நிறுவி மருத்துவ ஆலோசனைகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதிலிருந்து ஜனாதிபதி ஆரம்பத்திலேயே தவறிவிட்டார். பல குற்றங்களை அவர் புரிந்துள்ளார்.
இவ்வாறான இடர் முகாமைத்துவ செயலணியை இதுவரையில் நியமிக்காமை.
கோவிட்-19க் கெதிரான நடவடிக்கைகளை துறைசார் வல்லுநர்களை வைத்து இதுவரையில் கட்டுப்படுத்தாதது.
ஆயுதமேந்தி மக்களைக் கொல்லும் இராணுவத்தை கோவிட்டைக் கட்டுப்படுத்த நியமித்தமை.
கோவிட்டைக் காரணம் காட்டி அவசரகால நிலையை ஏற்படுத்தி சர்வதிகாரத்திற்கு வித்திட்டமை.
ஏற்கனவே பயங்கரவாத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அடுத்து கோவிட்-19ஐக் கட்டுப்படுத்த இராணுவத்தை அழைத்து அவர்கள் எங்கும் வியாபித்திருக்கின்றார்கள்.
மூன்றாவதாக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள் - என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்