
posted 1st September 2021
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடுவோரையும், ஒன்று கூடுவோரையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஓரங்கமாக பிரதேசத்தின் முக்கிய சந்திகளில் திடீர் முற்றுகையுடனான அண்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பரின் வழிகாட்டலில் குறிப்பாக மாலை வேளைகளில் வீதிகளில் நடமாடுவோரை இலக்கு வைத்து இந்த திடீர் அண்டிஜன் சோதனைகள் இடம் பெற்றவருகின்றன.
நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சிரேஷ்ட பொதுச் சுகாதாரப்பரிசோதகர் எம்.ஐ.எம்.சித்தீக் தலைமையிலான, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர் இந்த நடவடிக்கையைத் தினமும் முன்னெடுத்துவருகின்றனர்.
நிந்தவூர் பிரதேசத்தில் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பொது மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதை உறுதிப்படுத்தவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பர் தலைமையிலான, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் பெரும் முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருவதுடன்,
கொவிட் - 19 வைரஸ் தடுப்பு நிந்தவூர் செயலணியினரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.
எனினும் பொது மக்கள் தாமாக உணர்ந்து பாதுகாப்புடன் செயற்படவும், தனிமைப்படுத்தல் ஊரங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் முன்வரவேண்டுமென சுகாதாரத்துறையினர் வலியுறுத்திக் கோரியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்