தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள்! - மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள்! - மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தற்போதைய வடக்கு மாகாண கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

வடக்கு மாகாணத்தில் தற்போது கொவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன. அந்த அடிப்படையிலே 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

வடமாகாணத்தை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்ட 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் வடக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். அவர்களில் முதலாவது டோஸ் தடுப்பூசி 5 லட்சத்து 58 ஆயிரத்து 131 பேருக்கு நேற்று வரை வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 30 க்கும் மேற்பட்டோரின் சனத்தொகையில் 85 சதவீதமானோருக்கு முதல் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று வரை இரண்டாவது கட்ட தடுப்பூசி இரண்டு இலட்சத்து 94 ஆயிரத்து 69 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சனத்தொகையில் 45 வீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இரண்டாவது கட்டத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். யாழ். மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும். அதில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.

அண்மையில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் இறப்பு வீதமானது அதிகரித்துச் செல்கின்றது. பெரும்பாலான இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பே அதிகமாக காணப்படுகின்றது. அதிலும் தடுப்பூசி எதுவும் பெறாதவர்களே அதிகளவில் இறப்புகளை சந்திக்க நேரிடுகின்றது. அதன் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோரின் இறப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

இவை யாவும் நிறைவு செய்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நிறைவடைந்த பின்னர் 20வயதுக்கும் 30 க்கும் இடைப்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

இந்த பெருந் தொற்று காலப்பகுதியிலே இறப்புகளைத் தடுப்பதே எமது நோக்கமாக காணப்படுகின்றது. இறப்புகளைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் கட்டாயமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவேண்டும், என்றார்.

தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள்! - மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

எஸ் தில்லைநாதன்