
posted 26th September 2021
மாற்றுத்திறனாளியின் தோட்டத்திலுள்ள மிளகாய் செடிகளை விஷமிகள் பிடுங்கி எறிந்து அடாவடித்தனம் புரிந்துள்ளனர்.
இந்த சம்பவம் கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி - அரசர் கேணி பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் மாற்றுத்திறனாளியின் குடும்பம் தமது நிலத்தில் 800 மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். இவர்கள், விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில் கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் பயிரிட்ட மிளகாய்ச் செடிகள் காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், தோட்டத்திலுள்ள அனைத்து மிளகாய் செடிகளும் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தங்களை நிலைகுலைய செய்துள்ளதாகவும், இது போன்ற சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததுடன், இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்