
posted 6th September 2021
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் நஞ்சற்ற உணவு உற்பத்திக்கான , சேதனப்பசளை உற்பத்தி ஊக்குவிப்புத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றது.
இலங்கையில் இரசாயனப் பசளைப் பாவனையை முற்றாக ஒழித்து சேதனப் பசளை பாவனையை ஊக்குவிக்கவென இரசாயனப் பசளை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே இலங்கையின் நெல் உற்பத்தியில் 20 வீதத்தைப் பூர்த்தி செய்யும் முக்கிய மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில், விவசாயிகளை சேதனப் பசளை பாவனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரதானமாக எதிர்வரும் 2021/2022 பெரும்போக நெற்செய்கைக்கு சேதனப் பசளையையே பயன்படுத்த வேண்டுமென விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சேதனப் பசளை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான செயன்முறைப்பயிற்சிகளும் பிரதேச ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள 503 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இம்முறை 11 ஆயிரத்து 200 தொன்சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படவுள்ளன.
இதே வேளை நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான செயன்முறை பயிற்சி வழங்கும் செயற்திட்டமொன்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லதீப் தலைமையில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ். உம்முஜனிதாவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற இந்த செயன்முறைப் பயிற்சி முகாமுக்கு, நிந்தவூர் விவசாய விரிவாக்கல் அலுவலகம், கமநல சேவைகள் மத்திய நிலையம் என்பனவும் ஒத்துழைப்பு நல்கியது.
முகாம் நிகழ்வில் பெரும்பாக உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக், விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர் ஐ.எல்.பவுசுல் அமீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.சீ. அன்வர், உட்பட பெருமளவு விவசாயிகளும் கலந்து கொண்டனர் .

ஏ.எல்.எம்.சலீம்