
posted 10th September 2021
கொரொனா தொற்றால் உயிரிழந்த மாமுனை செம்பியன்பற்றைச் சேர்ந்த தர்மலிங்கம் இரத்தினகுலசிங்கம் (வயது-63) என்பவர் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா தெரிவித்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரொனா சிகிச்சைப் பிரிவில் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்த மேற்படி நபரின் மரண விசாரணை வியாழக்கிழமை(02) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.
விசாரணையின் போது இவரை கடந்த 16. 8 .2021 அன்று அப்பகுதியை சேர்ந்த நால்வர் இரும்புக் குளாயால் தாக்கியதாகவும், இதனால் படுகாயமடைந்த நிலையில் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று, நிமோனியா தொற்று இருந்தாலும் அடி காயத்தினாலேயே மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை தாக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்