கோவிட் தொற்றுக் காலத்தில் குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து காக்கவேண்டும் - பிரதமர்
கோவிட் தொற்றுக் காலத்தில் குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து காக்கவேண்டும் - பிரதமர்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும். பெரியவர்களுக்கு அக்கடமையை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் 'உலக சிறுவர் தினத்தை' முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் உலகளாவிய தொற்று நிலைமை காணப்படும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாத வகையில் அவர்களை பராமரித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்திருக்கும் வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

குழந்தைகளினாலேயே உலகம் அழகாகின்றது. அத்துடன் நாட்டினது எதிர்காலம் போன்றே உலகத்தின் எதிர்காலமும் குழந்தைகளிலேயே தங்கியுள்ளது. சிறுவர்களின் உலகம் பெரியோரது உலகத்தைவிட மிகவும் அழகானது. அந்த அழகை அவர்கள் எவ்வித தடையுமின்றி அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெரியோர்களது கடமையாகும்.

இதனை நன்கு புரிந்துக் கொண்ட ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சிறுவர்களின் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். நல்லொழுக்கம் மற்றும் ஆற்றல் நிறைந்த சிறுவர் தலைமுறை எதிர்காலத்தின் இருளை நீக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். சிறுவர் உரிமைகளை உறுதிபடுத்துவதற்கு நாம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாகவும் உறுதி பூண்டுள்ளோம்.

அதற்கமைய கடந்த காலங்களில் பாடசாலை கல்வியை கட்டாயமாக்குதல் மற்றும் சிறுவர் அடிமைத்தனத்தை சமூகத்திலிருந்து இல்லாதொழித்தல் போன்றவை குறித்த பல சட்டங்களை திருத்த கிடைத்தமை நாம் பெற்ற வெற்றியாகும்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக உலகின் பிற நாடுகள் போன்றே நமது நாட்டு சிறுவர்களது குழந்தை பருவமும் மிகுந்த சிக்கலாகியுள்ளது. சுதந்திரமாக ஓடித் திரியும் சுதந்திரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதானது சிறுவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதனால் உலகளாவிய தொற்று நிலைமை காணப்படும் இவ்வாறானதொரு சூழ்நிலையில் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாத வகையில் அவர்களை பராமரித்துக் கொள்வது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதனை துரிதகதியில் நிறைவுசெய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுடன் இணைந்து நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் படைப்புக்களை வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

'அனைத்திற்கும் முன்னுரிமை பிள்ளைகள்' எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இம்முறை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தின் இலக்கினை அடைவதற்கு அனைவரையும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன். சிறுவர்களின் உலகை நாம் அழகுபடுத்துவோம் என தெரிவித்துள்ளார்.


கோவிட் தொற்றுக் காலத்தில் குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து காக்கவேண்டும் - பிரதமர்

வாஸ் கூஞ்ஞ