
posted 24th September 2021

மன்னார் மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று நோய்க்கு உள்ளாகுவோருக்கான இரண்டாவது இடைநிலை சிகிச்சை முகாம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நறுவிலிக்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் உள்ளக விடுதியிலேயே இச் சிகிச்சை முகாம் சுதேச வைத்திய அமைச்சின் நான்கு மில்லியன் ரூபா நிதி உதவியுடனும் பாதுகாப்பு படையினரின் மனித வலுவுடனே இக் கொவிட் 19 தொற்று நோயாளருக்கான இவ் இடைநிலை சிகிச்சை நிலையம் அமையப்பெற்றுள்ளது.
மன்னார் தள்ளாடி 54வது படைபிரிவு கட்டளை தளபதி மேஐர் ஜெனரல் தர்சன விஜயசேகர, வட மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் திருமதி கணகேஸ்வரி ஜெபநாம கணேஷ்ணன், வட மாகாண சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் பி.செந்தில் நந்தனன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.குணபாலன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன், மருத்துவ அத்தியட்சகரும், மாவட்ட ஆயுள்வேத ஒருங்கிணைப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர்.மணிவர்ணன் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை (23.09.2021) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டுள்ள இச் சிகிச்சை முகாம் மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது முகாமாகவும் இது ஐம்பது படுக்கைகள் கொண்ட ஆண்களுக்கான சிகிச்சை நிலையமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் இச் சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டுள்ள போதும் இவ் வைத்தியசாலைக்கு ஆயுள்வேத வைத்தியத்துக்கு வரும் வெளிநோயாளருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு இவ் இடைநிலை சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் முதல் இங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை கொவிட் நோய்க்கு தடுப்பூசி பெறாமல் இந் நோய்க்கு உள்ளாகுவோரும் இங்கு சிகிச்சைபெற அழைத்துவரப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ