
posted 4th September 2021
அம்பாறை மாவட்டத்தில் கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்ந்துவரும் நிலையில், பொது மக்கள் அசமந்தப்போக்கில் செயற்படுவதால் இது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக உக்கிரமான கொவிட் - 19 வைரஸ் பரவலின் விளைவுகளை உணராதும், கொவிட் - 19 சுகாதார வழிமுறைகளைப் பேணாததும் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பொது மக்கள் அசட்டையாக நடந்துகொள்வதும் குறித்து சுகாதார தரப்பினர் உட்பட படைத் தரப்பினரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படையணியினர் அம்பாறை மாவட்டத்தில் மக்களை விழிப்பூட்டும் விசேட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இதன் முக்கிய அம்சமாக மேற்படி படையணியினர் கொவிட் - 19 வைரஸ் பரவலின் தாக்கங்களை உணர்த்தும் பதாகைகளை (பெனர்கள்) மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், முக்கிய இடங்களில் மக்களை விழிப்பூட்டும் வண்ணம் காட்சிப்படுத்தி வருகின்றனர்.
இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படையணியினர், பொது அமைப்புக்களின் அனுசரணையுடன்முன்னெடுத்துவரும் விழிப்பூட்டல் பதாகைகள் பொது மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகின்றது.
மேலும், கொவிட் - 19 வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபடச் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றத்தவறினால் ஏற்படும் விளைவு என்பவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு குறித்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 ஆவது படையணியின் குறித்த விழிப்பூட்டல் செயற்பாடுகள் பலராலும் பாராட்டப்படுகின்றது. வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி ஏற்றலுடன், மக்களுக்கு தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைளிலும் இராணுவத்தினர் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்