
posted 7th September 2021

மன்னார் மாவட்டத்தில் குடும்பநல உத்தியோகத்தர்கள் இந்த கொவிட் 19 தொற்றுக்காலப் பகுதியில் தங்கள் கடமைகளுக்கு அப்பால் மேலதிகமான கடமைகளையும் செய்து வருகின்றனர். இவர்களுக்கான இக் கொடுப்பனவுக்காக கடந்த பெப்பரவரி மாதம் தொடக்கம் நாம் விண்ணப்பித்து வருவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.
குடும்பநல உத்தியோகத்தர்களிற்கான மேலதிக நேரக் கொடுப்பனவானது ஏனைய மாவட்டங்களில் வழங்கப்படுகின்ற போதும் வடக்கு மாகாணம் இவ் உத்தியோகத்தர்களுக்கு இம் மேலதிக கொடுப்பனவை வழங்கப்படுவதில்லையென மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை (07.09.2021 காலை 09 மணி தொடக்கம் இரு மணி நேரம் இக் கவனயீர்ப்பு போராட்டம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக குடும்பநல உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநருக்கான மகஜரை மன்னார் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் த.வினோதனிடம் கையளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் த.வினோதன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
குடும்பநல உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளுக்கு அப்பால் மேலதிகமாக இக்காலத்தில் நிலவிவரும் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயல்பாட்டிலும் இவர்கள் இங்கு ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஒரு நாளைக்கு தங்களின் சாதாரண கடமைகளைவிட ஐந்து அல்லது ஆறு மணித்தியாலங்கள் தங்கள் கடமைகளை மேலதிகமாக செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு இந்த மேலதிக கொடுப்பனைவை வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுமதியே கிடைக்க வேண்டியுள்ளது.
இதற்கான அனுமதிகோரி நாங்கள் கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்னும் இதற்கான அனுமதி எமக்கு கிடைக்கப்பெறவில்லை. இருந்தும் தற்பொழுது இவர்களால் வழங்கப்பட்டிருக்கும் இந்த கோரிக்கையை தான் உடன் வடக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ