கிளினிக் மருந்துகள் அவரவர்க்கு அனுப்பிவைக்கப்படுகின்றன - பணிப்பாளர் வைத்திய கலாநிதி சென்தூர்பதிராஜா
கிளினிக் மருந்துகள் அவரவர்க்கு அனுப்பிவைக்கப்படுகின்றன - பணிப்பாளர் வைத்திய கலாநிதி சென்தூர்பதிராஜா

வைத்திய கலாநிதி சென்தூர்பதிராஜா

கடந்த மாதம் மன்னாரில் கொவிட் தொற்றாளர்களும் அத்துடன் இறப்பாளர்களும் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். மன்னார் பொது வைத்தியசாலையில் வழமையான கிளினிக் இடம்பெறுகின்றபோதும் வைத்தியரை அவசியம் சந்திக்க வேண்டும் என்றால் வருகை தாருங்கள் இல்லையேல் உங்களுக்கான மருந்துகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்டுகின்றது என மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சென்தூர்பதிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

வைத்திய கலாநிதி சென்துபத்ராஜா தெரிவிக்கையில்

மன்னார் மாவட்ட பொது வைத்திசாலையில் வழமைக்கு மாறாக கடந்த ஆவணி மாதம் (08.2021) கொரோனா தொற்றாளர்களாக அதிகமான பேர் பரிசோதனை மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவ் வைத்தியசாலைக்கு காய்ச்சல், தடுமல். சளி என வருவோருக்கு உடன் பி.சீ.ஆர் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களில் வைத்திசாலையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு இங்கு வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு தேவையில்லையெனின் வீடுகளில் கவனத்துடன் இருந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கடந்த மாதம் மட்டும் இவ் வைத்தியசாலையில் 180 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இதே மாதம் இவ் வைத்தியசாலையில் அத் தொற்றாளர்களின் இறப்புக்களும் அதிகரித்து காணப்பட்டுள்ளன. அதாவது மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 19 இறப்புக்கள் இடம்பெற்றிருக்கின்ற போதும் ஆவணி மாதம் மட்டும் எட்டு இறப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தற்பொழுது மன்னார் பொது வைத்தியசாலையில் முப்பது கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

ஆகவே இவ்வாறான நிலை தொடராதிருக்க மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக எற்கனவே மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வரும் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்து வரும்படியும் மக்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளாது தேவையற்ற முறையில் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்துகின்றோம்.

தற்பொழுது மன்னார் வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்கள் தொகை சற்று குறைந்திருக்கின்ற போதும் இங்கு வருவோரில் நாளாந்தம் ஓரிருவர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு வருகின்றனர்.

இவ் வைத்தியசாலைக்கு கிளினிக் சம்பந்தமாக வந்து செல்வோர் வழமைபோன்று தங்கள் கிளினிக்கை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
அவ்வாறு வர முடியாதவர்களுக்கு தபால் மூலம் அவர்களுக்கான மருந்து வகைகளை அனுப்பிவைக்கப்பட்டும் வருகின்றது. இன்றைய சூழலில் கிளினிக் சம்பந்தமாக வருவோர் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்வது விரும்பத்தக்கது. இருந்தும் அவசியம் வைத்தியரை சந்திக்கத்தான் வேண்டும் என்றால் அவர்கள் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் எடுத்து வருவதில் தடையில்லை. என தெரிவித்தார்.

கிளினிக் மருந்துகள் அவரவர்க்கு அனுப்பிவைக்கப்படுகின்றன - பணிப்பாளர் வைத்திய கலாநிதி சென்தூர்பதிராஜா

வாஸ் கூஞ்ஞ