காதி நீதிமன்ற ஒழிப்பு விவகாரம் அமைச்சர் அலிசப்ரி மீது பழிசுமத்துவது பொருத்தமானதல்ல! - ஹஸனலி கூறுகிறார்
காதி நீதிமன்ற ஒழிப்பு விவகாரம் அமைச்சர் அலிசப்ரி மீது பழிசுமத்துவது பொருத்தமானதல்ல! - ஹஸனலி கூறுகிறார்

எம்.ரி.ஹஸனலி

“முஸ்லிம்களின் காதி நீதிமன்றங்களை ஒழிக்கும் அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது பழிசுமத்தவோ, கண்டிக்கும் விமர்சனங்களை முன்வைப்பதோ பொருத்தமானதல்ல இதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, போர்க்கொடி தூக்க கடமைப்பட்டவர்கள் கண்டு கொள்ளாமல் மௌனம் காக்கும் போது, அமைச்சரை மட்டும் குறை கூறவும் முடியாது” இவ்வாறு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி கூறினார்.

காதி நீதிமன்ற முறைமையை இல்லாதொழிக்கவும், முஸ்லிம்களின் விவாகரத்து உட்பட குடும்ப விவகாரங்களை பொது நீதிமன்றங்களே கையாள வேண்டுமெனவும் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானங்கள் தொடர்பிலும், இதனையடுத்து நீதி அமைச்சர் அலிசப்ரி மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹஸனலி இந்த விவகாரம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.

“முஸ்லிம்கள் மீது இன்றைய அரசு தொடர் தேர்ச்சியாகத் தொடுத்துவரும் அடக்கு முறை, அரசியல் பழிவாங்கல், உரிமைப்பறிப்பின் ஓர் அங்கமாகவே காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கான விவகாரம் கையாளப்பட்டு வருகின்றது.
சுதந்திர பிரகடனத்திலும், 29 ஆவது அரசியலமைப்பு சரத்திலும் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுதப்பட்டுள்ள போதிலும், முஸ்லிம்களின் மத உரிமைகளில் மட்டும் படிப்படியாக கைவைக்கப்பட்டு வந்து இன்று சிறுபான்மை சமூகமான முஸ்லிம்சகளின் உரிமைகளை முற்றாக ஒழிக்கும் இறுதிக்கட்ட நிலைவந்துள்ளது.

பிரிட்டிசார் சுதந்திரம் வழங்கிச் செல்கையில், எதிர்காலத்தில் இங்கு சிறுபான்மையினர் நசுக்கப்படலாம், அடிமைப்படுத்தப்படலாமெனக் கருதியே உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில், அரசியல் சரத்துக்களில் உறுதிப்படுத்திச் சென்றனர்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் அமுலில் இருந்து வருகின்றது. இவ்வளவு காலமும் இது பாதுகாக்கப்பட்டே வந்தது. இந்நிலையில் கூடவே இருந்துவரும் கண்டிய சிங்களவர் சட்டம், தேச வழமைச்சட்டம் என்பவற்றில் கைவைக்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம்களின் உரிமையை உறுதிப்படுத்தும் சட்டத்தின் கீழான காதி நீதிமன்றங்களை ஒழிப்பதற்கு இன்றைய அரசு வரிந்து கட்டிக்கொண்டு செயற்படுவது கவலைதரும், விசனிக்கத்தக்க விடயமாகும்.

ஆண்டாண்டுகாலமாக அமுலில் இருந்துவரும் இந்த காதி நீதிமன்ற முறையை முஸ்லிம்களை பழிவாங்கும், அரசியல் வழிவாங்கல் மூலம் ஒழிக்க முனைவது கண்டிக்கத் தக்கதாகும்.

இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து, அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய முஸ்லிம் அரசியல் தலைமைகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதி நிதிகள் ஓடி ஒழிந்து கண்டுகொள்ளாமல் மௌனம் காத்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் வாக்குகளுக்காக அரசை மிக மோசமாக விமர்சித்து நாடாளுமன்றம் வந்தவர்கள் அரசோடு ஒட்டிக்கொண்டு பேசாமடந்தைகளாகமாறி நிற்கின்றனர். இது சமூகத்திற்குப் பெருத்த அவமானமும், தலை குனிவுமாகும்.

இன்று இந்த காதி நீதிமன்ற உரிமை மறுப்புக்கு எதிராக குரல் கொடுக்கவோ, தட்டிக்கேட்கவோ திராணியற்றவர்களாக இவர்கள் உள்ளனர்.

முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளைப்பாதுகாக்கவே எவருமற்ற ஒரு மோசமான நிலையில் முஸ்லிம் சமூகம் உள்ளது. அரசியல் அனாதைகளாக முஸ்லிம்கள் முத்திரை குத்தப்பட்டமையே இன்றைய நிலமைக்குக்காரணமாகும். இதற்கு வழிவகுத்தவர்கள், சமூகத்தைக்காட்டிக்கொடுத்தவர்கள் அபிவிருத்தி எனும் மாயையின் பின்னால் ஊழல்பேர் வழிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அலிசப்ரி

மேலும் காதி நீதிமன்ற விவகாரம் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி பெரும் விமர்சனத்திற்குள்ளாகிவருகின்றார்.

அமைச்சர் அலிசப்ரியை இன்றைய ஆட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராகவும் அழகுபார்த்துவரும் நிலையில், காதி நீதிமன்ற ஒழிப்பு விவகாரத்தில் அவர் மீது முழுப்பழியையும் சுமத்த முடியாது, குறை கூறி விமர்சிக்கவும் முடியாது. அவர் அரசுக்கே நன்றிக் கடன்பட்டவர்.

முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சினையாக எழுந்துள்ள காதி நீதிமன்ற விவகாரத்தில் நாம் அசமந்தமாக விருந்தால் புனித திருக்குர்ஆனில் கூட கைவைக்கவும் இவர்கள் முற்படலாம்.

சமூகத்திற்கு தலைமை தாங்குபவர்கள் முஸ்லிம் அமைப்புக்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள் முதலானோருக்கு தெளிவான விளக்கங்களை சன்மார்க்கம் வழிகாட்டல்களாகக் கூறும் போது, கடமை மறந்து, பொறுப்பற்று இத்தகையவர்கள் மௌனம் காப்பது விசனிக்கத் தக்கதாகும்” இவ்வாறு அவர் கூறினார்.

காதி நீதிமன்ற ஒழிப்பு விவகாரம் அமைச்சர் அலிசப்ரி மீது பழிசுமத்துவது பொருத்தமானதல்ல! - ஹஸனலி கூறுகிறார்

ஏ.எல்.எம்.சலீம்