
posted 11th September 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நாட்டில் அமுலிலுள்ள நிலையிலும், கல்முனைப் பிராந்தியத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், திடீர் பி.சி.ஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பகுதியினர் தொடர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக பிரதான வீதிகளில் பயணிப்போரையும் இலக்கு வைத்து எழுந்தமானமான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை, கல்முனை பிரதான வீதியில் எழுந்தமானமான இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றன.
பிரதான வீதியில் பயணித்த பலர் இராணுவத்தினரின் அனுசரணையுடன் நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கல்முனைப்பிராந்தியத்தில் கொவிட் - 19 டெல்டா திரிபு வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையிலும் பொது மக்கள் அதனைக் கவனத்திற்கொள்ளாது பொது வீதிகளிலும், பொது இடங்களிலும் கூடுதலாக நடமாடி வருவது குறித்து சுகாதாரத் துறையினர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்குச்சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எ.எல்.எம்.சலீம்