
posted 9th September 2021

டாக்டர். ஜீ.சுகுணன்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், கொவிட் - 19 திரிபு டெல்டா வைரஸ் பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்தியத்திலிருந்து அனுப்பப்பட்ட பீ.சீ.ஆர் மாதிரிகளில் 95 வீதம் டெல்டா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளதுடன்,
இந்த அதிர்ச்சித் தகவல் தொடர்பில் மக்கள் மிக விழிப்புடன் செயற்பட முன்வருமாறும் அவர் கண்டிப்பான கோரிக்கையும் விடுத்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி கிழக்கிலிருந்து கொழும்பு சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைகளுக்காக பீ.சி.ஆர் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில், கல்முனையிலிருந்தும் 26 மாதிரிகள் அதனுடன் அனுப்பப்பட்டன.
இதன்படி கல்முனைப் பிராந்தியத்திலிருந்து அனுப்பப்பட்ட 26 பீ.சீ.ஆர் மாதிரிகளில் 17 டெல்டா வைரஸ் பரவலும், ஒரு அல்பா வைரஸ் பரவலும் கண்டறியப்பட்டுள்ளதுடன், எட்டு மாதிரிகள் பரிசோதனைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்தியத்தில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவர் ஒருவரும் டெல்டா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த டெல்டா திரிபு வைரஸ் பரவல் தொற்று நிலமை தொடர்பிலும், அதன் பாரதூரம் தொடர்பிலும் பிராந்திய மக்களுக்கு விழிப்பூட்டல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்,
தொற்று நிலமை தொடர்பில் பொது மக்கள் மிக விழிப்புடன் செயற்படுதல், சுகாதார பாதுகாப்பு விதி முறைகளைப் பின்பற்றுதல், கூட்டமாகக் கூடாதிருத்தல், தடுப்பூசிகளை விரைவாக ஏற்றிக்கொள்ளுதல் என்பதில் கண்டிப்பாகக் கவனம் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதே வேளை நேற்று புதன் கிழமை கல்முனைப் பிராந்தியத்தில் 35 கொவிட் - 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், இரு கொவிட் மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம்