
posted 22nd September 2021

கல்முனை மாநகர சபையின் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்த அமர்வு இன்று புதன் கிழமை நடைபெறவிருந்த போதிலும் இறுதிநேரத்தில் சபை அமர்வு இடம்பெறாதென அறிவிக்கப்பட்டதால், அமர்வுக்கு வருகை தந்த உறுப்பினர்கள் பலர் பெரும் கொதிப்படைந்ததுடன் கண்டனக் குரல்களையும் எழுப்பினர்.
கல்முனை மாநகர சபையின் இம்மாதத்திற்கான மாதாந்த அமர்வு இன்று புதன் கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறுமென மாநகர சபை செயலாளரால் கடித மூலம் சபை உறுப்பினர்களுக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டிருந்தன.
மாநகரமேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெறவிருந்த இச்சபை அமர்வுக்கு உரிய வேளைக்கு வருகை தந்த உறுப்பினர்களுக்கு சபா மண்டபத்தில் வைத்து இன்று மேயரின் அறிவித்தல்படி அமர்வு இடம்பெறாது என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சபை அமர்வு இடம்பெறுமென எதிர்பார்த்து வருகை தந்திருந்த உறுப்பினர்கள் பலர் பெரும் கொதிப்படைந்ததுடன், சபா மண்டபத்திற்குள் கண்டனக் குரல்களையும் எழுப்பினர்.
சபையின் பெண் உறுப்பினர்கள் சிலரும் அமர்வுக்காக அங்குவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேச்சைக் குழு உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களெனப் பல உறுப்பினர்கள் சபா மண்டபத்தின் மத்தியில் ஒருங்கு சேர்ந்து சபை அமர்வு நடைபெறாமையைச் சிலாகித்துக் குரல் எழுப்பினர்.
இதேவேளை கடந்த மூன்று மாதகாலமாக சபை அமர்வுகள் இவ்வாறே மழுங்கடிக்கப்படுவதாகவும், கொவிட் - 19 அனர்த்த காலத்தில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்துப் பேசித்தீர்வுகள் காண நாம் எங்கு செல்வது? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு போன்ற அயல்பகுதிகளிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் மாதாந்த அமர்வுகள் சீராக நடைபெற்றுவரும் நிலையில் கல்முனை மாநகர சபை அமர்வுகளுக்கு இக்கதி ஏன்? எனவும் உறுப்பினர் ஒருவர் விசனத்துடன் கேள்வி எழுப்பினார்.
வருகை தந்து பின்னர் வெளியேறிச் சென்ற உறுப்பினர்களிடம் சபை அமர்வுக்கான வரவுப் புத்தக்கத்திலும், உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு பத்திரத்திலும் ஒப்பங்கள் பெறப்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது.


ஏ.எல்.எம்.சலீம்