
posted 18th September 2021

அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்
மன்னார் மாவட்டத்தில் மணலை மாவட்ட செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் அதனை எனக்கோ அல்லது பிரதேச செயலாளர்களுக்கோ அத்தாட்சியுடன் அறிவித்தால் சம்பத்தப்பட்டவர்களது அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.
இவ்வறிவித்தலை அரசாங்க அதிபர் கடந்த 16.08.2021 அன்று நடைபெற்ற மாவட்ட சட்ட அமுலாக்கல் குழு கூட்டத்தில் தீர்மானமாக அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கடந்த காலம் முதல் இன்று வரை இம்மணல் அகழ்வும், நியாயமற்ற விலை விற்பனையும் பெரும் பிரச்சனையாக உள்ளதால் இத்தீர்மானம் எடுப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, மக்களின் தேவைகளுக்கு தடையின்றி மண் வினியோகம் கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படுவதற்கு எம்மிடம் புவிச்சரிவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதி பெற்றவர்களின் விபரங்கள் அப்பகுதி கிராம அலுவலகர்களுக்கு வழங்குவதனூடாக இதனை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டதின்படி மணல் விற்கப்படவேண்டும் எனத் தீர்மானத்தது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. விற்கப்பட வேண்டிய விலை விபரமாவது;
ஒரு ரிப்பர் மணல், தலைமன்னார் பகுதியில் 34 ஆயிரம் ரூபா, மன்னார் நகரத்தில் 30 ஆயிரம் ரூபா, நானாட்டான் பகுதியில் 32 அயிரம் ரூபா, மாந்தை மேற்கு மற்றும் மடு பகுதிகளில் தலா 29 ஆயிரம் ரூபா.
எனவே, சம்பத்தப்பட்ட திணைக்களங்கள் இதில் மிக்ககவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் என அரச அதிபர் கூறினார்.

வாஸ் கூஞ்ஞ