
posted 6th September 2021

மன்னார் மாவட்டத்தில் சதொச மற்றும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் இதேவேளையில் மன்னார் பகுதியில் பல கிராமபுர மக்கள் இதன் பலாபலன்களை அடையமுடியவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்கள் குறிப்பாக போக்குவரத்து சேவைகள், விற்பனை நிலையங்கள் பல நாட்களாக முடக்கப்பட்டுள்ள நிலையில் இருந்து வருகின்றன. இவைகள் இவ்வாறு இருந்தபோதும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சதொச மற்றும் பல நோக்கு கூட்டுறவு சங்க கடைகள் திறந்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றன.
இதன்போது ஒவ்வொரு வீடுகளிலும் பாவனைகளுக்கு இருந்துவரும் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று இவற்றை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் காணக்கூடியதாக இருக்கின்றது. அதுவும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இவற்றை பெறுவதிலேயே மக்கள் முனைந்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், பேசாலை. அடம்பன். மடு மற்றும் முருங்கன் ஆகிய பகுதிகளில் மாத்திரமே சதொச விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.

மேலும் மன்னார் பெரும் நிலப்பரப்பில் பல இடங்களில் பல நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் காணப்படுகின்ற போதும் பல கிராம புறங்களில் இவ்வாறான வசதிகள் இல்லாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மன்னார் தீவின் இறுதி எல்லைப் பிரிவில் இருக்கும் தலைமன்னார் பகுதியில் எந்தவித சதொச மற்றும் பல நோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் அற்ற நிலை காணப்படுவதால் தலைமன்னார் பியர், தலைமன்னார் கிராமம், தலைமன்னார் ஸ்ரேசன் ஆகிய பகுதிகளில் செறிந்து வாழும் மக்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். இப் பகுதி மக்கள் 15 கிலோ மீற்றர் தூரம் சென்றே பேசாலையிலுள்ள சதொச விற்பனை நிலையத்துக்குச் சென்று இப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டி இருப்பதாகவும் அதுவும் பயணக் கட்டுபாடுகள் அமுலில் இருப்பதால் அங்கும் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இப் பகுதி மக்கள் கிராமங்களிலுள்ள கடைகளில் சம்பா, வெ.நாடு அரிசி ஒரு கிலோ தலா 180 ரூபாவுக்கும், அரலியா அரிசி 220 ரூபாவுக்கும், சீனி 300 ரூபாவுக்கும், 75 கிராம் பால் மா 100 ரூபாவுக்கும் இவ்வாறு பல பொருட்கள் கூடிய விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக கவலை தொவிக்கின்றனர்.
ஆகவே இப் பகுதிகளில் நடமாடும் சேவையில் ஈடுபடும் மரக்கறி விற்பனை போன்று அத்தியாவசிய பொருட்களையும் சதொச அல்லது பல நோக்கு கூட்டுறவு விற்பனை நிலையம் சேவையில் ஈடுபட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என பாதிப்படைந்து வரும் மக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ