ஓய்வூதிய அதிகரிப்பை வழங்குமாறு வேண்டுகோள் - ஏ.எல்.முகம்மத் முக்தார்
ஓய்வூதிய அதிகரிப்பை வழங்குமாறு வேண்டுகோள் - ஏ.எல்.முகம்மத் முக்தார்

ஏ.எல்.முகம்மத் முக்தார்

"அரசாங்க சேவையில் இருந்து 2016ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பை 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்" என ஓய்வூதியர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவரும் ஓய்வுபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தருமான ஏ.எல்.முகம்மத் முக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கு அவசர மகஜர்களை அனுப்பி அவர் அனுப்பி வைத்துள்ளார்

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 2016ஆம் ஆண்டு சகல அரசாங்க ஊழியர்களின் சம்பளம் நூற்றி ஏழு மடங்காக அதிகரிக்கப்பட்டு, 2016 முதல் 2019 வரை கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டுடன் பூரணப்படுத்தப்பட்டது.

உண்மையில் இச்சம்பள அதிகரிப்பு 2016ஆம் ஆண்டுக்குரியது. ஆனால் அரசாங்க நிதி நிலை காரணமாக 05 கட்டங்களாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக அரச நிருவாக சுற்று நிருபம் வெளியிடப்பட்ட சமயம் 2016 முதல் 2019 வரையான காலப் பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கமைய வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய அதிகரிப்பு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வதிகரிப்பு தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்தால் வழங்கப்படும் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடைப் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வூதிய கொடைப்பத்திரம் என்பது அரச காசோலை போன்றதொரு பெறுமதியான ஆவணமாகும். ஆனால் இந்த ஓய்வூதியர்கள் அனைவருக்கும் இன்று வரை அது குறிப்பிடப்பட்டே வழங்கப்படுகிறது. இதனை நிறுத்துமாறு எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக சுமார் 120,000 (ஒரு இலட்சத்து 20 ஆயிரம்) ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவதற்கு எந்தவொரு தொழிற் சங்கமும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும், பொருத்தமான பதில் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே, இது விடயத்தில் ஜனாதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் போன்றோர் நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்குரிய அதிகரிக்கப்பட்ட ஓய்வூதினத்தை அடுத்த வரவு- செலவு திட்டம் மூலமாக வழங்குமாறு தாம் அனுப்பிய மகஜர்களில் வலியுறுத்தி கேட்டுள்ளதாக ஏ.எல்.முகம்மத் முக்தார் மேலும் தெரிவித்தார்.

ஓய்வூதிய அதிகரிப்பை வழங்குமாறு வேண்டுகோள் - ஏ.எல்.முகம்மத் முக்தார்

ஏ.எல்.எம்.சலீம்