
posted 29th September 2021

தவிசாளர் தாஹிர்
“வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மை சமூகங்களை நோக்கி திட்டமிடப்பட்ட முறையில் ஏவி விடப்பட்டுள்ள வைரஸ்தான் போதைப் பொருட்களாகும். எதிர்கால இளைஞர் சமூகத்தை இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.”
இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் எச்சரிக்கை விடுத்தார்.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வில் தவிசாளர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தவிசாளர் தாஹிர் தமது விசேட உரையில் பிரதேச ரீதியிலான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்;
“நமது பிராந்தியத்தில் இன்று போதைப்பொருள் பாவனை, போதைப்பொருட்கள் விற்பனை என்பன தொடர்பில் அதிர்ச்சியும், கவலையும் தரும் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களை நோக்கி திட்டமிடப்பட்ட வகையில் ஏவி விடப்பட்டுள்ள வைரஸாகவே போதைப்பொருட்கள் ஊடறுத்துள்ளன.
இந்த விடயத்தில் பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற நிலமையே உள்ளது.
கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள தரப்பினரது செயற்பாடுகள் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
போதைப்பொருட்களை விற்பனை செய்வோர் இனம் காட்டப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் சமயம், எளிதாக அத்தகையவர்கள் விடுவிக்கப்படும் நிலை சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.
எனவே, நம் எதிர்கால நற்பிரஜைகளாக மிளிர வேண்டிய இளம் சமுதாயத்தினரை ஏவி விடப்பட்டுள்ள இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். இதற்காக துறைசார்ந்தவர்கள், பொது அமைப்புக்கள், பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள ஜீ.சீ.ஈ. சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளின் படி நமது பிரதேசங்களில் கூடுதலாக பெண்மாணவியர்களே சித்தி பெற்றுள்ளதுடன், சிறந்த பெறுபெறுகளையும் பெற்றுள்ளனர்.
மாணவர்களின் பெறுபேறு வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து உரிய மாற்று நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்