
posted 15th September 2021
மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏற்கனவே பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் புதன்கிழமை (15) முதல் பிரயாணத்தை மேற்கொள்வோர் மீது கொரோனா தடுப்பூசி அடையாள அட்டை சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போன்று இன்று புதன்கிழமை (15) முதல் மன்னார் மாவட்டத்தில் போக்குவரத்து செய்வோரிடம் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட அடையாள அட்டை சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து சோதனை சாவடிகளில் வைத்து இப் பிரயாணிகள் மீது இச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரயாணங்களை மேற்கொள்வோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இத் தடுப்பூசி அடையாள அட்டை தற்பொழுது சோதனையிடப்படுகின்றது எனவும் தெரியவருகின்றது.
இது முதல் தடவை என்பதனால் தடுப்பூசி போடாதவர்கள் அடையாளம் காணப்பட்ட அனைவரும் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வைத்திய அதிகாரிகளாளும் பொது சுகாதார பரிசோதகர்களாளும் கடுமையாக எச்சரித்து விடபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் இந்த நடவடிக்கைகள் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டு தடுப்பூசி அட்டை இல்லாதவர்களுக்கு அந்த இடத்தில் பி.சி .ஆர் அல்லது அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. வினோதன் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ