
posted 6th September 2021
நாட்டில் அஞ்சல் சேவைகள் அத்தியாவசிய சேவையாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அஞ்சல்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அஞ்சல் திணைக்கள சேவைகள் இன்று திங்கட் கிழமை (06/09/2021) முதல் தபாலக சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
கொவிட் - 19 வைரஸ் பரவலும், அதனால் ஏற்படும் மரணங்களும் நாட்டில் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து, தபாலகங்கள் திறக்கும் நாட்களும், தபாலக சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்படி வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களே தபாலகங்கள் திறக்கப்பட்டதுடன், முதியோர் கொடுப்பனவு, பொது ஜன மாதாந்த கொடுப்பனவு வழங்கல், துரித தபால் விநியோகம் (Speed post) வெளிநாட்டு தபால்சேவை ( EMS), கிளினிக் மருந்து பொதிகள் விநியோகம் போன்ற சேவைகளே மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இடம்பெற்றுவந்தன.
எனினும் இன்று முதல் தபாலகங்களில் வழக்கம்போல் இடம்பெற்று வந்த சகல சேவைகளும், அஞ்சல்மா அதிபரின் பணிப்புரைக்கமைய இடம்பெற்று வருவதாக அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தரும் சங்கப் பொதுச் செயலாளரும், நிந்தவூர் பிரதம தபாலதிபருமான யூ.எல்.எம்.பைஸர் தெரிவித்தார்.
தினசரி தபால் விநியோகம் உட்பட தபாலக கருமபீட சேவைகளும் (நீர், மின்சார, தொலைபேசி கட்டணங்கள் செலுத்துதல், முத்திரை விநியோகம், பதிவுத்தபால் போன்ற பல சேவைகளும்) வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு தற்சமயம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும், இந்த ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை அமுலிலிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்