
posted 16th September 2021

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும், இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரிபெற்றுத்தந்தவருமான, முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் நாட்டின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் நினைவு கூரப்பட்டார்.
தலைவர் அஷ்ரஃப் மறைந்து 21 வருடங்களாகும் நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கிளைகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அன்னாரின் 21 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர்.
தற்போதய கொவிட் - 19 வைரஸ் பரவல் நிலமைக்கு மத்தியில் அரங்க நிகழ்வுகள் எதுவுமின்றி, மார்க்க ரீதியான பிரார்த்தனை நிகழ்வுகளே இதற்காக இடம் பெற்றன.
கொழும்பிலுள்ள முஸ்லிம்காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வியாழன் காலை, நினைவேந்தலின் விசேட நிகழ்வாக கத்தமுல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன், அன்னாரின் ஈடேற்றத்திற்காக விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் முஸ்லிம்காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உட்பட மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உலமாக்கள், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் அம்பாறை மாவட்டம் கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசின் ஏற்பாட்டில் “தலைவர் அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வாக கத்தமுல் குர்ஆன், துஆ பிரார்த்தனை என்பன இடம் பெற்றன.
அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாச்சாரமன்றம், சம்மாந்துறை வேர்களும் விழுதுகளும் சமூக நல அமைப்பு உட்பட மாவட்ட மட்டத்தில் மேலும் பல அமைப்புக்களும் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக நடத்தின.
இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தலைவர் அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வு இன்று இரவு 9.30 மணிக்கு (இலங்கை நேரம்) zoom தொழில் நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம் பெற்றவுள்ளது

ஏ.எல்.எம்.சலீம்