அரசின் உண்மையான சுயரூபம் இதுதான் என்பதனை வங்காலைப்பாட்டு மீனவர்களின் தாக்கல் சிறப்பான உதாரணம் - சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி
அரசின் உண்மையான சுயரூபம் இதுதான் என்பதனை வங்காலைப்பாட்டு மீனவர்களின் தாக்கல் சிறப்பான உதாரணம் - சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

சாள்ஸ் நிர்மலநாதன் (வன்னி பா. உ.)

தமிழரின் மீதான அரசின் வெறித்தன்மையான நிலைப்பாடு வங்காலைப்பாடு மீனவர்கள் மீது கடற்படையினர் நடத்திய தாக்குதல் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகவும், அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஈழத்தமிழர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் எதிர் விளைவாக இதனை ஒரு முக்கிய உதாரணமாகக் கூறலாம். இதுதான் இந்த அரசாங்கத்தின் உண்மை முகம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சனிக்கிழமை (25) பேசாலை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட வங்காலைப்பாடு மீனவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடகத்துக்கு தெரிவிக்கையில்;

சனிக்கிழமை (25) நள்ளிரவு மீன்பிடித்துவிட்டு கரை சேர்ந்த மீனவர்கள் மீது மதுபோதையில் இருந்த கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை அறிந்த அவ்வூர் கிராம சேவகர் ஒருவர் அவ்விடத்திற்கு விரைந்து, “ஏன் இவர்களை இப்படி தாக்குகின்றீர்கள்” என்று வினவியதற்கு, சீருடை அணியாத பத்துக்கு மேற்பட்ட கடற்படையினர் அவர் ஒரு கிராம அலுவலகர் என தெரிந்திருந்தும் கொடூரமாக தாக்கினர். இக் கிராம அலுவலகர் இப்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

இந்த செயல்பாடானது கடற்படையினரின் அஜாராகத் தன்மையும் இப்பொழுது இருக்கின்ற அரசாங்கத்தின் உண்மை முகத்தையும் காட்டும் ஒரு செயல்பாடாக இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக தற்பொழுது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகவும் அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு எதிராகவும் ஈழத்தமிழர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் விளைவாக இங்கு இருக்கும் படையினரின் மனங்களில் தமிழர்கள் மீது ஒரு வெறித்தன்மையான நிலை யொன்று ஆழப்பதிந்துள்ளது.

இந்த உணர்வின் வெளிப்பாடுதான் இந்த செயல்பாடாகும். இவ்வாறான செயல்பாடு கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். இது தொடர்பாக நான் வட மாகாண பொலிஸ் மா அதிபருக்கு முறையீடு செய்துள்ளேன்.

இதைத் தொடர்ந்து அவர் பொலிஸ் அதிகாரிகளை இங்கு அனுப்பியுள்ளார். அதேபோன்று கடற்படையினரும் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.

இவ் விடயமானது மிகவும் வேதனைக்குரியதும் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும் என தெரிவித்தார்.

அரசின் உண்மையான சுயரூபம் இதுதான் என்பதனை வங்காலைப்பாட்டு மீனவர்களின் தாக்கல் சிறப்பான உதாரணம் - சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

வாஸ் கூஞ்ஞ