
posted 29th September 2021

புதிய தவிசாளர் எம்.ஐ.எம்.இஸதீன்
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நான் எல்லா சமூகத்தினரும் ஒன்றுபட்டு ஒரு பாலமாக இணைந்து செயல்படும் நிலைக்கு முன்னெடுத்துச் செல்வேன். அத்துடன் எனது கட்சியைச் சார்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் இதில் எதிராக செயல்பட்டமைக்கு கண்டனத்தை தெரிவித்து நிற்கின்றேன் என எம்.ஐ.எம்.இஸதீன் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு புதன் கிழமை (29.09.2021) மன்னார் பிரதேச சபை மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. இத் தேர்வில் எருக்கலம்பிட்டியை பிரநிதித்துவப்படுத்தும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இஸதீன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
இன்றைய தினம் மன்னார் பிரதேச சபை தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. இதன் தெரிவில் நான் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு மகிழ்வு கொள்ளுகின்றேன்.
இதற்கு முதற்கண் நான் இறைவனுக்கு நன்றி கூறி நிற்கின்றேன். அடுத்து இந்த தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆறு உறுப்பினர்களும் எனக்கு பெரும் துணையாக இருந்து செயல்பட்டதற்கும் நான் அவர்களின் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
அத்துடன் எனக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் றிச்சட் அவர்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டனி உறுப்பினர் அந்தோனிப்பிள்ளை மற்றும் ஈபிடிபி கட்சி உறுப்பினர் பி.சகாயநாதன் குரூஸ் இவர்களுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவாக இருப்பேன்.
மேலும் இத் தெரிவு போட்டியில் நடுநிலை வகித்து செயல்பட்ட உறுப்பினர்களுக்கும் அத்துடன் எனக்கு வாக்களிக்காத உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து நிற்கின்றேன்.
இந்த மன்னார் பிரதேச சபையானது அனைத்து சமூகங்களின் ஒரு ஒற்றுமையின் பாலமாக அமைவதற்கான எனது முயற்சி தொடர்ந்து அமையும்.
எனது கட்சியைச் சார்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இப் பிரதேச சபை உறுப்பினரான ஜே. இன்சாப் எனக்கு எதிராக செயல்பட்டமைக்கு எனது கண்டனத்தை இந்நேரத்தில் தெரிவித்து நிற்கின்றேன்.
நான் ஒரு தவிசாளராக வர வேண்டும் என ஏனைய கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒத்துழைத்தபோதும் எனது கட்சியைச் சார்ந்த இந்த உறுப்பினர் ஒத்துழையாமைக்கு கவலை கொண்டவனாக இருக்கின்றேன்.
எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து சகோதரத்துவத்துடன் இப் பிரதேச சபையை முன்னெடுத்துச் செல்வேன் என இந்நேரத்தில் உறுதியளித்து நிற்கின்றேன்.

வாஸ் கூஞ்ஞ