
posted 17th September 2021
அடிகாயங்களுடன் மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வீதியில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டது.
இதுதொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் அந்தப் பகுதிக்கு சென்று பார்த்தபோது, சடலத்தின் அருகோ உயிரிழந்தவர் பயணித்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் 3 சோடி செருப்புகளும் காணப்பட்டன.
பொலிஸாரின் விசாரணைகளில் மாவிட்டபுரம் - நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மதியாபரணம் ஜெனூசன் (வயது -22) என்பவரே இவ்வாறு உயிழந்தார் என்று தெரிய வந்துள்ளது. இவர் மல்லாகம் பகுதியிலுள்ள மரண சடங்குக்கு சென்றிருந்தார் என்றும் அதன் பின்னர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டார் என்றும் தெரிய வந்தது.
ஆனால், மோதல் எங்கு, எவ்வாறு இடம்பெற்றது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
பின்னைய செய்தி:
காங்கேசன்துறை பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத்தலைவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது தலையில் காயம் காணப்படுவதாகப் பொலிஸார் கூறினர்.
அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளைக் கைது செய்யுமாறும் உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். அதனால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் நேற்று விியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை முதன்மை வீதியின் ஓரமாக ஒருவர் வீழ்ந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்தபோது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது.
சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டனர். ஆரம்ப விசாரணைகளின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்

எஸ் தில்லைநாதன்