
posted 20th September 2021
“அகமுரண்பாடுகளைத் தவிர்த்து தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டும்;. எமது மக்களின் உரிமைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் ஒருமித்த குரலே பயனளிக்கும்.”
இவ்வாறு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரும், ஊடகப் பேச்சாளரும், ஓய்வு நிலைபிரதிக்கல்விப் பணிப்பாளருமான வீ.குணாளன் கூறினார்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று, கல்முனை ஊடகமையத்தில் இடம் பெற்றபோது அதில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தற்போதய தலைவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஏ.குணசேகரன், அம்பாறை மாவட்ட பொருளாளரும், முகாமைத்துவ உதவியாளருமான எஸ்.நாகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பொதுச் செயலாளர் குணாளன் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் பின்வருமாறு கூறினார்.
“எமது கிழக்கு தமிழர் ஒன்றியம் தமிழ் அரசியல் கட்சிகளையும், தமிழ் அரசியல் தலைமைகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்த்து எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான பகீரத முயற்சிகளையும் முன்னெடுத்து வந்தோம். மேலும் கிழக்கு மாகாணத்திற்கான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கவும் பாடுபட்டோம். ஆனால் கடந்த பொதுத்தேர்தலுடன் எமது முயற்சிகள் கைகூடாமல் போனாலும் இதற்கான எமது முயற்சி இன்னும் தொடருமென்ற உறுதியுடனிருக்கின்றோம்.
முக்கியமாக, இலங்கையைப் பற்றிய முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமென்ற எதிர்பார்ப்புள்ள 48 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு நமது தமிழர் தரப்புக்கள் சரியான ஒன்றுபட்ட அறிக்கையை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், நமது தமிழ் கட்சிகள், தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து பொதுவான அறிக்கையை அனுப்புவதை விடுத்து தனித்தனியே பிரிந்து கடிதங்களை அனுப்பி வைத்தமை கவலைதரும் விடயமாகும். இது நம்மை நாமே பலகீனமாக்கிக் காட்ட முனைந்த செயற்பாடேயாகும்.
எனவே, தமிழ் கட்சிகள், அரசியல் தலைமைகள் அக முரண்பாடுகளை முற்படுத்தி வக்கிரமாகப் பிரிந்து செயற்படுவதைத் தொடரக்கூடாது.
அதிலும் ஒன்றுபட்டு செயற்படவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது தவிர பிரிந்து செயற்படுவதற்கல்ல.
எனவே, எமது தமிழ் மக்களின் எதிர் பார்ப்புக்களை வெற்றி கொள்வதற்கு ஒன்றுபட்ட செயற்பாடுகளே முக்கியமாகும். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் தமிழர் அரசியல் தனித்துவமானது இங்கு எமது தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைப்பது போன்ற விடயங்கள் தனித்துவமான அரசியல் பலத்தைப் பொறுத்ததாகும்.
இன்னும் கவலைதரும் விடயம் என்னவெனில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ, ஏனைய அரசு சார்ந்தோரோ, எமது மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அசட்டையாகவே உள்ளமையே.
இதேவேளை பேரினவாத அரசியலின் உள்நுழைவே தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்ற போதிலும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இங்கு இணைந்தே வாழ வேண்டுமென்ற யதார்த்தத்தை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.
மேலும் அண்மைய அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
இதனால் தமிழ் அரசியல் கைதிகள் மன உழைசலுக்கும், அச்சத்திற்கும் ஆட்படும் நிலமையுள்ளது. இவர்களை பாதுகாப்பான, அவர்களது அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றவும் ஆவன செய்யப்பட வேண்டும்.
அதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவும் வேண்டும். இதற்கான சமிக்ஞையைக் காட்டியுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் நல்லெண்ணமும், முயற்சியும் விரைவில் வெற்றிபெற வேண்டும்.”

ஏ.எல்.எம்.சலீம்