
posted 13th September 2021

கொரோனா தொற்று நோயை தடுப்பதற்காக போடப்படும் தடுப்பூசியில் பைசர் ஊசிதான் போடுவோம் என அடம்பிடித்து சிலர் இத் தடுப்பூசியை போடாதிருப்பதால் இவர்களால் ஏனையோர் இக் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் புதன் கிழமை (15.09.2021) முதல் சகல சோதனைச் சாவடிகளிலும் தடுப்பூசி அட்டை அல்லது போனில் சேமிக்கப்பட்ட அதனுடைய நிழற்படம் சோதிக்கப்படும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பணிப்பாளர் வினோதன் மேலும் கூறுகையில், 30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு, 'சினோபாம்' தடுப்பூசி போடுவதற்கான இறுதி நாளாக இன்று திங்கள் கிழமை (13.09.2021) புதுக்குடியிருப்பு முஸ்லீம் மகாவித்தியாலயத்திலும், நாளை செவ்வாய் கிழமை (14.09.2021) கட்டையடம்பன் மகா வித்தியாலயத்திலும் இத் தடுப்பூசியை ஏற்றுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாளிலிருந்து (15.09.2021) சகல சோதனைச் சாவடிகளிலும் தடுப்பூசி அட்டை அல்லது போனில் சேமிக்கப்பட்ட அதன் ஆதாரம் சோதிக்கப்படும்.
தடுப்பூசி பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளபடும். இச் சோதனையில், கொரோனா தொற்று உடைய ஆண்கள் வவுனியா தேக்கவத்தை இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கும், பெண்கள் தாராபுரம் துருக்கி சிட்டி இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப்படுவர். தடுப்பூசி பெறாதவர்கள் எந்த காரணத்துக்காகவும் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் திணைக்களங்களத்தின் பொறுப்பாளர்கள், நிறுவனத் தலைவர்கள் தடுப்பூசி பெறாத உத்தியோகத்தர்களுக்கு சுழற்சி முறை விடுமுறையோ விஷேட விடுமுறையோ வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்டுகின்றார்கள்.
அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசனையை மீறி தடுப்பூசி பெறாமல் இருப்பவர்களுக்கு அரசின் விஷேட சலுகைகளை அனுபவிக்க முடியாமல் இருக்கும் என்பதை திணைக்கள பொறுப்பாளர்களும், நிறுவனத் தலைவர்களும் நன்கு அறிவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும் எனவும் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ