
posted 14th September 2021

“கொரோனா வைரஸ் பரவல் அனர்த்த நிலமை காரணமாக மட்டக்களப்ப மாவட்டத்தில் பலதரப்பு மக்களதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வறுமை நிலையைப் போக்க அரசு விசேட திட்டமொன்றை வகுத்து வழிசமைக்க முன்வர வேண்டும்”
இவ்வாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் (பத்ம நாபா மன்றம் - ஈ.பி.ஆர்.எல்.எப்) அரசைக்கோரியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் உறுப்பினர் துரைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 346 கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 1400 கிராமங்களில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் அண்ணளவாக 1-1/2 வருட காலமாக கொரோனா அதிகரிப்பினால் தொற்றுக்குப் பயந்து போக்குவரத்து செய்யாமல் பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் தங்களது வாழ்வாதாரத்தை; கழித்து வருகின்றனர்.
கொரோனாவின் தொற்று அதிகரிக்க அதிகரிக்க ஓவ்வொருவரும் பீதியுடன் வாழவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
மாவட்டத்திலுள்ள பல இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக இயல்பு வாழ்க்கையை கட்டுப்படுத்தும் செயற்பாடு அதிகரித்துச் செல்கின்றன. கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக அரச நிறுவனங்களில் வேலை செய்வோர் முதல் தனியார் நிறுவனங்களில் கூலித் தொழில் புரிவோர், தினக்கூலி, விவசாயம், மீன்பிடி, கால்நடை, சாரதிகள், வர்த்தக நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்களில் கடமை புரிவோர்கள் வரை மாகாணம், மாவட்டம், பிரதேசங்களில் கடமைக்குச் செல்வதில் அச்சமடைந்து வீடுகளிலேயே உண்ண உணவின்றி பரிதவிக்கின்றனர்.
இந்த நிலையில் மாதாந்த சம்பளம் பெறுவோர்கள் தொடக்கம் தினக்கூலி வேலை செய்கின்றவர்கள் வரையும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல தினங்களாக பால்மா சீனி மற்றும் அத்தியாவசி பொருட்களின்றி சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் சமூர்த்தியால் வழங்கப்படும் கொடுப்பனவு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
இத்தோடு மாதாந்தம் சம்பளம் பெறுவோர் கூட ஏற்கனவே பெற்ற கடனை அந் நிறுவனங்கள் மாதாந்தம் அறவீடு செய்வதால் அவர்கள் பெறும் சம்பளமும் போதுமானதாக இல்லை. ஓட்டு மொத்தமாக பல நூற்றுக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
எனவே அரசாங்கம் மக்களின் வறுமையைப் போக்க விசேட திட்டமொன்றை தயாரித்து மக்களை காப்பாற்ற வழி சமைக்க வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்