
posted 9th September 2021
யாழ். மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருள் விற்றல், காலாவதியான பொருள் விற்றல் போன்ற குற்றச்சாட்டுகளில் கடந்த மூன்று வாரங்களாக 53 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த திங்கட்கிழமை (06.09.2021) மட்டும் 8 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நீதிமன்ற நடைமுறையில் சற்று தாமதம் காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் தொடர்ச்சியாக பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையினரால் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு
விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுகின்றது.
அதனுடன் நிறுத்தல் மற்றும் அளவைகள் திணைக் களங்களும் தங்கள் பணியாளர்களை களப் பணியில் ஈடுபடுத்தி பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் நடைபாதை வியாபார நிலையங்களும், நடமாடும் விற்பனை வண்டிகளும் பரிசோதனை செய்யபடவுள்ளன.
எனவே வியாபாரிகள் மிகவும் விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு சகாய விலையில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும். மாறாக அதிக விலைக்கு விற்பனை செய்து பிடிபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையுடன் இணைந்த வகையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் 5 பட்டதாரிப் பயிலுநர்களுடன் இணைந்து இப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு நாளாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது.
குறிப்பாக சீனி, அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தொடர்பான விற்பனை நிலை தொடர்பில் ஆராயப்பட்டும் வருகின்றது. நேற்று முன் தினத்தில் இருந்து மிகவும் இறுக்கமான முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது,
என்றார்.

எஸ் தில்லைநாதன்